மதுரை:''தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றதால், உயர்கல்வியை தேர்வு செய்வது தொடர்பான குழப்பங்களுக்கு தீர்வு கிடைத்தது. படிப்புகளை தேர்வு செய்வதற்கான தெளிவும் கிடைத்தது,'' என மாணவிகள் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது:

ஷபியா, கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை
பொறியியல் இ.சி., படிக்கலாம் என முடிவு செய்திருந்தேன். ஆனாலும் குழப்பம் இருந்தது. கருத்தரங்கில் பொறியியல் படிப்புகள் நிலவரம் குறித்து, கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தெளிவாக விளக்கம் அளித்தார். இதனால் ஐ.டி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க முடிவு செய்துள்ளேன். என்போன்ற குழப்பம் உள்ள மாணவர்களுக்கான பயனுள்ள நிகழ்ச்சி.
ஐஸ்வர்யா, அண்ணாநகர், மதுரை
பி.இ., பயோ டெக்லாலஜி படிக்கலாம் என இருந்தேன். பெற்றோரிடமும் என் முடிவை சொல்லி சம்மதம் பெற்றுவிட்டேன். ஆனால் அதுபோன்ற பாடத்தில் பி.ஜி., படிப்புகள் படித்தால் தான் சிறப்பான எதிர்காலம் இருக்கும் என கருத்தரங்கு மூலம் தெரிந்துகொண்டேன். இதனால் என் முடிவை மாற்றிக்கொண்டேன். இதுதவிர ஏராளமான படிப்புகள் இருப்பதை கேட்டு பிரமிப்பாக உள்ளது. உயர்கல்வி படிப்புகள் குறித்து நல்ல புரிதல் ஏற்பட்டுள்ளது.
அக்ஷயா, கோமதிபுரம், மதுரை
மருத்துவம் படிக்கும் நோக்கத்தில் உள்ளேன். அது கிடைக்காதபட்சத்தில் அதுதொடர்பான பாரா மெடிக்கல் படிப்புகள் இருப்பதை தெரிந்துகொண்டேன். கண்காட்சி பிரமாண்டமாக உள்ளது. கல்லுாரிகள், அங்குள்ள படிப்புகள், கட்டணம் குறித்து தெரிந்துகொண்டேன். பெற்றோரின் அலைச்சல் தவிர்க்கப்பட்டுள்ளது. வழிகாட்டி புத்தகத்திலும் ஏராளமான தகவல்கள் உள்ளன. கருத்தரங்கு பயனுள்ளதாக இருந்தது. தினமலர் நாளிதழுக்கு நன்றி.
சாருலதா, ஜூப்ளி டவுன், மதுரை
நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளேன். அதற்காக தயாராகிறேன். இந்நிகழ்ச்சியில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன. நான் எத்தனை மதிப்பெண் பெற்றால் எனக்கு மருத்துவம் கிடைக்கும் என தெரிந்தது. சித்தா, ஆயுர்வேதம் படிப்புகளுக்கு எதிர்காலம் உள்ளது என தெரிவிக்கப்பட்டது. பல்வேறு கல்லுாரிகள் குறித்த தகவல்கள் ஒரே இடத்தில் கிடைத்ததும் பயனுள்ளதாக இருந்தது.