ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வின் (ஜே.இ.இ.) முதல்நிலைத் தேர்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.8) நடத்தப்பட உள்ளது.

இந்தத் தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். முதலில் முதல் நிலைத் தேர்வு, பின்னர் முதன்மைத் தேர்வு (அட்வான்ஸ்டு) நடத்தப்படும். முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் என்.ஐ.டி. போன்ற மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற முடியும்.
முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுபவர்களில் முதல் 1.5 லட்சம் பேர், அடுத்து நடத்தப்படும் ஜே.இ.இ. முதன்மைத் தேர்வில் பங்கேற்கும் தகுதியைப் பெறுவர். முதன்மைத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் நாடு முழுவதும் உள்ள ஐஐடி, ஐஐஎஸ்சி கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற முடியும். 
முதல்நிலைத் தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியமும் (சிபிஎஸ்இ), முதன்மைத் தேர்வை ஏதாவது ஒரு ஐஐடி-யும் நடத்தும்.
இப்போது 2018-ஆம் ஆண்டுக்கான ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வின் நேரடி எழுத்துத் தேர்வு நாடு முழுவதும் 258 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்க 10 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 15, 16 தேதிகளில் முதல்நிலைத் தேர்வுக்கான ஆன்-லைன் தேர்வு நடத்தப்படும்.
மே 20-இல் முதன்மைத் தேர்வு: முதல்நிலைத் தேர்வு முடிவடைந்த பின்னர், ஜே.இ.இ. முதன்மைத் தேர்வானது மே 20-இல் நடத்தப்பட உள்ளது. இந்த ஆன்-லைன் தேர்வை ஐஐடி கான்பூர் நடத்துகிறது. இதற்கு விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான ஆன்-லைன் பதிவு மே 2-ஆம் தேதி தொடங்கி, மே 7-ஆம் தேதியுடன் முடிவடைந்து விடும்.