சென்னை: பிளஸ் ஒன் பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது.


கடந்த 2017-ம் ஆண்டு வரை பிளஸ் 1 தேர்வு சாதாரண வருடாந்திர தேர்வாகவே நடத்தப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு முதல்முறையாக பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. இதில், வெற்றி பெறும் மாணவர்கள் மட்டுமின்றி, தோல்வியடைந்தவர்களும் அடுத்து பிளஸ் 2 வகுப்புக்கு சென்றுவிடலாம் என பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த தேர்வு கடந்த மார்ச் 7-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 16-ம் தேதி நிறைவடைந்தது. தமிழகம், புதுச்சேரியில் பள்ளி மாணவ, மாணவிகள், தனித் தேர்வர்கள் என 8 லட்சத்து 63 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். இதில் கணிதம், வேதியியல், பொருளியல் உள்ளிட்ட சில பாடங்களில் வினாக்கள் கடினமாக கேட்கப்பட்டிருந்ததாக மாணவர்கள் தெரிவித்திருந்தனர்.

விடைத் தாள் மதிப்பீடு உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் திட்டமிட்டபடி நாளை காலை தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. காலை 9.00 மணிக்கு முடிவுகள் வெளியிடப்படவுள்ளதாகவும் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தளங்கள் மூலமாக தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் எனவும் பள்ளிக்கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.