சென்னை: மெட்ரிக்குலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் 1, 2 -ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டு பாடங்கள் கொடுக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.


மத்திய அரசின் பாட்டத்திட்டமான சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவர்களுக்கு அதிகளவில் வீட்டுப்பாடங்கள் கொடுக்கப்படுவதாகவும், இதனால் மாணவர்கள் வீட்டிற்கு வந்தும் அதிகநேரம் படிக்க வேண்டி உள்ளதாகவும் பரவலாக கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் இதுகுறித்து புருஷோத்தமன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதனை இன்று விசாரணை செய்த நீதிபதி கிருபாகரன் மெட்ரிக்குலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் 1, 2 வகுப்பு மாணவர்களுக்கு வீட்டு பாடங்கள் கொடுக்க கூடாது என உத்தரவிட்டார். மீறி வீட்டுப்பாடம் கொடுத்தால், அந்த பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றார்.

அத்துடன், 3-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை சுற்றுச்சூழல் பாடத்திட்டத்தை சேர்க்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். மேலும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான என்சிஇஆர்டி பாடங்களை மட்டுமே பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நடத்துவதுடன், பாடத்திட்டங்களை அமைக்கும்போது கவுன்சில் விதிகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.