ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிடப் போவதாக ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் அறிவித்திருந்தனர்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், இன்றும் கைது நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தலைமை செயலகத்தை சுற்றியுள்ள பகுதிகள், அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் 5000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.தலைமைச் செயலகம் அமைந்துள்ள காமராஜர் சாலை, போர் நினைவு சின்னம் முதல் உயர்நீதிமன்றம் வரையிலான சாலை பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. தீவுத்திடலில் இருந்து தலைமைச் செயலகம் செல்லும் சாலையிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கோயம்படு பேருந்து நிலையம், சென்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் போராட்டம் நடத்த வந்த ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சந்தேகப்படும்படியாக உள்ள நபர்களிடம் அடையாள அட்டையை காண்பிக்குமாறு போலீசார் வலியுறுத்தி வருகின்றனர்.

கடலூர் வழியாக 14 வாகனங்களில் சென்னை வந்த ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் சென்னையில் 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 1500க்கும் மேற்பட்ட  நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் அருகில் உள்ள காவல் நிலையங்களில் தங்க வைத்துள்ளனர். தொடர்ந்து பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கடந்த ஆண்டு சுமார் 50,000க்கும் மேற்பட்ட ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.