சென்னை:'கோடை விடுமுறை முடிந்து, ஜூன், 1ல், மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது, பள்ளி வளாகத்தை துாய்மையானதாகவும், நேர்த்தியானதாகவும், தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்' என, பள்ளி தலைமை ஆசிரியர்களை, பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் அறிவுறுத்தி உள்ளார்.

அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:கோடை விடுமுறை முடிந்து, ஜூன், 1ல், அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. அன்று, மாணவர்கள், பள்ளிக்கு வரும்போது, பள்ளி வளாகம் துாய்மையானதாகவும், நேர்த்தியானதாகவும், கற்கும் சூழலுக்கு ஏற்ற வகையிலும், தயார் நிலையில் இருக்க வேண்டியது அவசியம்.
அதற்கேற்ப, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பள்ளி வளாகத்தை தயார்படுத்த வேண்டும். பள்ளிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை, கிருமி நாசினி பயன்படுத்தி, துாய்மையாக பராமரிக்க வேண்டும். கழிப்பறைகள் அனைத்தையும் சுத்தம் செய்ய வேண்டும். பழுது இருந்தால், சரி செய்ய வேண்டும். 
மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்த வகையில், குடிநீர் குழாய், கழிவறைகள் இருக்க வேண்டும். குறைவாக இருந்தால், கூடுதலாக அமைக்க வேண்டும்.பள்ளி வளாகத்தில், புதர், கற்குவியல் மற்றும் கழிவுப் பொருட்கள் இல்லாதபடி, துாய்மையாக வைத்திருக்க வேண்டும். பள்ளங்கள் இருந்தால், அவற்றை மூட வேண்டும். 
கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, கழிவுநீர் தொட்டி ஆகியவற்றை, முறையாக மூட வேண்டும். வகுப்பறைகளில் மின் விசிறிகள், மின் விளக்குகள் பழுதடைந்திருந்தால், அவற்றை பழுது நீக்க வேண்டும். பள்ளி கட்டடங்களில், பழுது இருந்தால் சரி செய்ய வேண்டும். பள்ளி திறக்கும் நாளன்றே, ஆசிரியர்கள் மற்றும் வகுப்புகளுக்கான, கால அட்டவணை வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


விளம்பரம் வெளியிட தடை



'அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களின் புகைப்படங்களுடன், விளம்பரம் வெளியிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, இளங்கோவன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:அரசு பொதுத் தேர்வு முடிவுகளை, தேர்வுத்துறை விரைவில் அறிவிக்க உள்ளது. மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கவும், ஆரோக்கியமற்ற போட்டி சூழலை தவிர்க்கவும், மாநில மற்றும் மாவட்ட அளவில், முதல் மூன்று இடங்களை அறிவிக்கும் நடைமுறை கைவிடப்பட்டுள்ளது.
இதற்கு மாறாக, சில மாணவர்களின் பெயர், புகைப்படம் தாங்கிய விளம்பர பிரசுரங்கள் வெளியிடுதல், பேனர் அமைத்தல் போன்ற செயல்பாடுகளை, மாணவர்கள் நலன் கருதி, அனைத்து பள்ளிகளும் தவிர்க்க வேண்டும். இது தொடர்பாக, அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், தகுந்த அறிவுரை வழங்க வேண்டும்.
அரசாணையின்படி செயல்படாத பள்ளிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த விபரத்தை, பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு, அறிக்கையாக சமர்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.