பிளஸ் 2 தேர்வு முடிவுகள், திட்டமிட்டபடி நேற்று வெளியிடப்பட்டன. இதில், 91.1 சதவீத மாணவ - மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

தமிழக பாடத் திட்டத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச், 1ல் துவங்கி, ஏப்., 6ல் முடிந்தது. தேர்வுக்கு, 6,754 பள்ளிகளைச் சேர்ந்த, 8.66 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களில், 8.60 லட்சம் மாணவ - மாணவியர் உட்பட, தனித் தேர்வர்களையும் சேர்த்து, 9.07 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இவர்களில், நான்கு லட்சத்து, 179 பேர் மாணவியர்.தேர்வு முடிவுகள், நேற்று காலை, 9:15 மணிக்கு இணையதளத்தில் வெளியாகின. மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்களுக்கு, மொபைல் போனில், எஸ்.எம்.எஸ்., ஆக மதிப்பெண்கள் அனுப்பப்பட்டன. இதில், 91.1 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில், 94.1 சதவீதம் மாணவியர், 87.7 சதவீதம் மாணவர்கள். மாணவர்களை விட, மாணவியர், 6.4 சதவீதம் கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில், 1,907 பள்ளிகளின் மாணவர்கள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவற்றில், 238 அரசு பள்ளிகள். இந்த ஆண்டும், 'ரேங்கிங்' முறை ரத்து செய்யப்பட்டு உள்ளதால், மாநில, மாவட்ட அளவில் யார், 'டாப்பர்' என்ற விபரங்கள் அறிவிக்கப்படவில்லை. மாறாக, மதிப்பெண் அடுக்கு முறையில், எத்தனை பேர், எவ்வளவு மதிப்பெண் பெற்றுள்ளனர் என்ற எண்ணிக்கையை, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டார்.இதன்படி, 181 மாணவியர் உட்பட, 231 பேர், 1,180க்கு மேல், மதிப்பெண் பெற்றுள்ளனர். 3,407 மாணவியர் உட்பட, 4,847 பேர், 1,150 முதல், 1,180 வரை மதிப்பெண் பெற்றுள்ளனர். 5,641 மாணவியர் உட்பட, 8,510 பேர், 1,126 முதல், 1,150 வரை மதிப்பெண் பெற்றுள்ளனர்.
சி.பி.எஸ்.இ., பள்ளிகள், 'டாப்' : மாவட்ட அளவில், விருதுநகர், 97.05 சதவீத தேர்ச்சியுடன் முதலிடம் பெற்றுள்ளது. ஈரோடு, 96.35 சதவீதத்துடன், இரண்டாம் இடமும், திருப்பூர், 96.18 சதவீதத்துடன், மூன்றாம் இடமும் பெற்றுள்ளன. பள்ளி நிர்வாக அளவில், மெட்ரிக் பள்ளிகள், 98.04 தேர்ச்சியுடன், முதலிடம் பெற்றுள்ளன. பள்ளிக்கல்வி இயக்குனரக கட்டுப்பாட்டில் உள்ள, தனியார் பள்ளிகள், 97.99 சதவீதத்துடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளன.மாநில பாடத் திட்டத்தில் பாடம் நடத்தும், சி.பி.எஸ்.இ., பள்ளிகள், 97.77 சதவீதம் தேர்ச்சியுடன், மூன்றாம் இடம் பிடித்து, சாதனை படைத்துள்ளன.
சாதித்தது தேர்வுத்துறை : கடந்த ஆண்டு, வெயில் தாக்கம் காரணமாக, ஜூன், 1க்கு பதில், ஜூன், 7ல் பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளி திறந்த நாளிலேயே, தேர்வுகள் நடத்தப்படும் தேதி, முடியும் தேதி, தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி ஆகியவை அறிவிக்கப்பட்டன. இந்த அறிவிப்பின்படி, திட்டமிட்ட தேதியில் தேர்வுகளை, அரசு தேர்வுத் துறை நடத்தியது. அதேபோல், தேர்வு முடிந்ததும், விடை திருத்த பணிகளை தவிர்த்து, ஆசிரியர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். இதை, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி திறமையாக சமாளித்து, திட்டமிட்டபடி, தேர்வு முடிவுகளை வெளியிட்டார். தேர்வை நடத்துவது, முடிவை வெளியிடுவதில், மத்திய அரசின், யு.பி.எஸ்.சி., சிவில் சர்வீசஸ் தேர்வுத் துறை, தமிழக, டி.என்.பி.எஸ்.சி., ஆகியவை கூட தடுமாறும் நிலையில், தமிழக அரசு தேர்வுத்துறை, எந்த குளறுபடியும் இன்றி, அறிவித்த தேதிகளில், அனைத்தையும் முடித்து, சாதித்துள்ளது.
தேர்ச்சி விகிதம் சரிவு : கடந்த ஆண்டில், 92.1 சதவீதமாக தேர்ச்சி, இந்தாண்டு, 1 சதவீதம் குறைந்து, 91.1 சதவீதமாக உள்ளது. இதில், 89.3ல் இருந்த மாணவர்களின் தேர்ச்சி சதவீதம், 1.6 சதவீதம் குறைந்து, 87.7 சதவீதமாக உள்ளது. 94.5 சதவீதமாக இருந்த மாணவியரின் தேர்ச்சி விகிதம், 0.4 சதவீதம் குறைந்து, 94.1 சதவீதமாக உள்ளது. 2017ல், ஒரு திருநங்கை தேர்வு எழுதினார்; இந்தாண்டில் ஒருவர் கூட எழுதவில்லை.
14 ஆயிரம் மாணவர் பயன் : தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதையொட்டி, மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு, மனநல ஆலோசனை வழங்கவும், அடுத்து என்ன படிக்கலாம் என, வழி காட்டவும், '104' மருத்துவ சேவை மையத்தில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.மேலும், பள்ளிக்கல்வித் துறையின், 14417 என்ற சேவை எண்ணிலும், ஆலோசனை வழங்கப்பட்டது. நேற்று மாலை வரை, 14 ஆயிரத்து, 824 பேர் பயன் பெற்றுள்ளனர்.