நாடு முழுவதும் மே 6 -ஆம் தேதி நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வில் தமிழ் வினாத்தாளில் தவறான மொழிபெயர்ப்பு மற்றும் பிழையுடன் 49 கேள்விகள் இடம்பெற்றுள்ளதாக 'டெக் ஃபார் ஆல்' எனும் அறக்கட்டளை குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக, இந்த அறக்கட்டளையின் நிறுவனர் ஜி.பி.ராம்பிரகாஷ் சென்னையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:
நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் (தாவரவியல், விலங்கியல்) பாடங்களில் இருந்து 180 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இவற்றில், தமிழ் மொழி வினாத்தாளில் இடம்பெற்றிருந்த 49 கேள்விகள் தவறான மொழிபெயர்ப்பு மற்றும் பிழைகளுடன் இருந்தன. உதாரணமாக செங்குத்து என்பது 'நேர்குத்து' எனவும், சிறுத்தையின் என்பதற்கு 'சீத்தாவின்' என்றும் தவறாக இடம்பெற்றிருந்தன. 
இதேபோன்று, இயல்பு மாற்றம் என்றிருக்க வேண்டியது 'இயல்மாற்றம்' எனவும், தாவரங்கள் என்பது 'பிளாண்டே' என்றும், பழுப்பு என்பது 'பழப்பு' என்றும் பிழையுடன் இடம்பெற்றுள்ளன. இவை தவறான பொருளைக் கொடுக்கின்றன.
மதிப்பெண் அளிக்கப்படுமா? நீட் தேர்வில் ஒரு கேள்விக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் 180 கேள்விக்கு 720 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. 49 கேள்விகள் பிழைகளுடன் இடம்பெற்றிருப்பதால், அந்த 49 கேள்விகளுக்கு 196 சலுகை மதிப்பெண் வழங்க வேண்டும். இதனை தமிழக முதல்வர் மற்றும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கவனத்துக்குக் கொண்டு செல்ல இருக்கிறோம். 
தவறு ஏற்பட்டது ஏன்? நீட் தேர்வுக்கான பாடத்திட்டங்களை அளிக்கும் என்சிஇஆர்டி புத்தகங்கள் தமிழ் மொழியில் இல்லை. அதனால்தான் மொழிபெயர்ப்பு செய்வதில் சிபிஎஸ்இ தவறு செய்துள்ளது. தமிழ் மொழியில் என்சிஇஆர்டி புத்தகங்களை வெளியிட வேண்டும். இனிவரும் ஆண்டுகளில் இதுபோன்ற பிழைகள் ஏற்படாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார் அவர்.