-டாக்டர் ந. ராமசுப்ரமணியன், கல்வியாளர்

மாணவர்களை காவு வாங்கவும், தனியார் பயிற்சி நிறுவனங்கள் அமைத்து கொள்ளையடிக்கவும் மட்டுமே நீட் தேர்வு உதவும் என்று கல்வியாளர் டாக்டர் ராமசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.


மருத்துவப் படிப்பிற்காக நாடு முழுவதும் கொண்டு வரப்பட்டுள்ள நீட் நுழைவுத் தேர்வால் தமிழக மாணவர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டதோடு மட்டுமில்லாமல், 3 மாணவர்கள் தங்களது தந்தையரை இழந்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கல்வியாளர் ராம சுப்ரமணியன் நீட் தேர்வால் மாணவர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும், இதனால் யார் அதிக பயனடைவார்கள் என்பது குறித்து நீண்ட பதிவினை பதிவிட்டுள்ளார்.

அதில், கடந்த மூன்று வருடங்களாக மருத்துவப் படிப்புக்கான "நீட்'' எனும் நுழைவுத் தேர்வு பற்றிய புத்தகங்களும், பாதகங்களும் பல தரப்பில் அறிமுகப்படுகின்றன. இந்தியாவில் சுமார் 65,000 இடங்கள் மருத்துவப் படிப்பிற்கும், 25,000 இடங்கள் பல் மருத்துவப் படிப்பிற்கும் உள்ளன. இது தவிர, 2018ஆம் ஆண்டு முதல் ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஹோமியோபதி, யோகா போன்ற படிப்பிற்கும் ""நீட்'' தேர்வு அவசியமாக்கப்பட்டது. வெளி நாட்டில் மருத்துவம் படிக்கவும் "நீட்'' தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்ற விதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நீட் எனும் நுழைவுத் தேர்வு பொறியியல், வணிகம் போன்ற இதரப் படிப்புகளுக்கும் அவசியம் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகின்றது. உச்ச நீதிமன்றம் நீட் தேர்வு சட்டப்படி செல்லாது என முந்தைய உத்தரவினை மாற்றி எழுதியது. தமிழக அரசு ஒரு அவசர சட்டத்தின் மூலம் 2016 ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு நீட் தேர்விலிருந்து ஒரு வருடம் விலக்கு உண்டு என்று தெரிவித்ததை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. ஆனால் தனியார் மருத்துவக் கல்லூரிகள் சேர்க்கைக்கு நீட் தேர்வு நடத்தப்பட்டது.

2017ம் ஆண்டு தமிழக அரசு, அரசுக் கல்லூரிகள் சேர்க்கைக்கு நீட் தேர்வு கிடையாது என்ற ஒரு மசோதாவை நிறைவேற்றி, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பிவைத்ததற்கு இன்றுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை. மத்திய அரசு இவ்விஷயத்தில் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தியாவில், பல்வேறு மாநிலப் பாடத்திட்டங்கள், சி.பி.எஸ்.சி., ஐ.சி.எஸ்.சி போன்ற 42 வகைப் பாடத்திட்டங்கள் இருக்கின்றன. ஆனால் முக்கிய பாடங்களான உயிரியல், பௌதீகம், ரசாயனம் ஆகியவை ஒரே மாதிரியாக இல்லை. இந்தியா முழுமைக்கும் ஒரே விதமான பாடத்திட்டம் வேண்டும் என்று கல்வி உரிமைச் சட்டம் குறிப்பிட்டாலும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், வெவ்வேறு விதமான பாடத்திட்டங்கள் கொண்ட நம் நாட்டில், சி.பி.எஸ்.சி. பாடத்திட்ட அடிப்படையில், சி.பி.எஸ்.சி. எனும் மத்திய கல்வித் துறை அமைப்பு கேள்வித் தாள்களைத் தயாரித்து, தேர்வினையும் நடத்துவது ஒரு சமதளப் போட்டி இருக்காது என்று பல மாநிலங்களிலும் எதிர்ப்பு இருந்தாலும், தமிழகத்தில் நீட் தேர்வு என்பது மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்குப் பெருந்தீங்கு ஏற்படுத்தும் என்று பல போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில், கிராமப்புர மாணவர்கள் நலன் கருதி ஒரு வருடத்திற்கு விலக்கு அளிக்க ஆவன செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதிமொழி அளித்ததை ஒட்டி தமிழக அரசு ஒரு அவசர சட்டத்தைப் பிறப்பித்தது. ஆனால் இதை ஏற்க இயலாது என்று மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் அறிவித்தது தமிழக மாணவர்களுக்கு அநீதியாக முடிந்தது.

இதனால் மருத்துவம் படிக்க முடியாது போன அனிதா எனும் மிகச் சிறந்த மாணவி தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தில் பெரும் புயலை ஏற்படுத்தியது. நீட் தேர்வுக்கு எதிரான போரட்டங்கள் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்றன. 2016இல் சி.பி.எஸ்.சி. மாணவர்களுக்கு 30 இடங்களே கிடைத்த நிலையில் 2017இல் 1310 இடங்கள் அவர்கள் பெற்றனர். சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் படித்து தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கை 3382. தமிழகப் பள்ளி பாடத்திட்டத்தின்படி 23,830 மாணவர்களில் 2224 பேர் தகுதி பெற்றனர். அதாவது வெறும் 9.33% மாணவர்கள் மட்டுமே. சி.பி.எஸ்.சி. மாணவர்களுக்கு "ஜாக்பாட்'' அடித்தது.

தேர்வு பெற்ற மாணவர்கள் அனைவருமே நீட் தேர்வுக்காக பெரிய அளவில் கட்டணம் செலுத்தி தேர்ச்சி பெற்றவர்கள். மேலும் ஒருவருடம், இருவருடம் முன்பே பிளஸ்டூ தேர்வு எழுதியவர்களும், மீண்டும் இந்த நீட் தேர்வில் பங்கு பெற பயிற்சி பெற்று, தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். ஆக, பணம், சமதளமற்ற பாடத்திட்டங்கள், கடுமையான பயிற்சி, ஓரிரு வருடம் கால விரயம் ஆனாலும் மீண்டும் போட்டித் தேர்வில் பங்கு பெறுதல் என்பது அனைத்து மாணவர்களுக்கும் இயலாத ஒன்றே. இது அதர்மமான போட்டித் தேர்வு என்று தமிழகம் கொதிப்பது நிச்சயமாக அர்த்தமுள்ளது. மேலும் சி.பி.எஸ்.சி. க்குப் பதில் வேறொரு தந்திரமான அமைப்பு தேர்வினை நடத்தும் என்ற மத்திய அரசு அறிவிப்பு காற்றில் விடப்பட்டது.

பொறியியல், மருத்துவம் ஆகிய படிப்பில் சேர 2006 ஆம் ஆண்டு வரை தமிழக அரசால் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் பிளஸ்டூ மதிப்பெண்ணுக்கு 66%, நுழைவுத் தேர்வுக்கு 37% என இரண்டுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, வெற்றிபெற்றோர் பட்டியல் வெளியிடப்பட்டது. நீட் தேர்வு வந்த பிறகு பிளஸ்டூ மதிப்பெண்ணைக் கணக்கிலெடுத்துக் கொள்வதில்லை. ஆனால் நுழைவுத் தேர்வுக்குத் தயாரிப்பு, மன உளைச்சல், கட்டணக் கொடுமை என்பதையெல்லாம் கணக்கெடுத்து, இனி நுழைவுத் தேர்வே கிடையாது, பிளஸ்டூ தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெறும் என்ற 2006 ஆம் ஆண்டு சட்டம் அனைத்துத் தரப்பு மக்களாலும் வரவேற்கப்பட்டது.

நீட் தேர்வின் மூலம் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் தரமற்ற மாணவர்கள் சேர்க்கை, கட்டணக் கொள்ளை ஆகியவற்றைத் தவிர்த்து, நாடு முழுவதற்கும் மருத்துவப்படிப்பிற்கு ஒரே நுழைவுத் தேர்வு என்ற வகையில் தரமான மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, கட்டணக் கொள்கையைத் தவிர்க்கலாம் என்ற அடிப்படை என்று வாதிடப்பட்டு உச்ச நீதிமன்றம் இதனை ஏற்றது. ஆனால் பல்வேறு தரப்பட்ட பாடத்திட்டங்கள் கொண்ட நாட்டில் சி.பி.எஸ்.சி. எனும் பாடத்திட்டப்படியே தேர்வு என்பதும், சி.பி.எஸ்.சி. அமைப்பே தேர்வை நடத்தும் என்பதும் எந்தவகையில் நியாயம்? நீட் தேர்வில் சென்ற வருடம் 11.38 லட்சம் பேர் பங்கு பெற்றனர். இவ்வருடம் 13.26 லட்சம் பேர் பங்கு பெற்றுள்ளனர்.

இதில் குறைந்தது 10 லட்சம் மாணவர்களாவது கட்டணம் செலுத்திப் பயிற்சி பெற்றவர்களே. இக்கட்டணம் ரூ. 15,000 முதல் ரூ. 1.50 லட்சம் வரை பல பயிற்சி அமைப்புகளால் வசூலிக்கப்பட்டுள்ளன. சராசரியாக ரூ. 25,000 பயிற்சிக் கட்டணம் என்று கணக்கிட்டால் 10 லட்சம் மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட தொகை ரூ. 2,500 கோடி ஆகும். தனியார் மருத்துவக் கல்லூரிக் கொள்ளை என்று பேசியவர்கள், இந்த பயிற்சிக் கட்டணக் கொள்ளையைப்பற்றி என்ன கூறுகிறார்கள்? விண்ணப்பப் படிவம் ஒன்று ரூ. 1,400 என்றும், தாழ்த்தப் பட்ட மாணவர்களுக்கு ரூ. 750 என்றும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. சராசரியாக ரூ. 1000 என்று எடுத்துக் கொண்டாலும், 13.26 லட்சம் மாணவர்களிடமிருந்து விண்ணப்பப் படிவத்திற்கு மட்டும் சி.பி.எஸ்.சி. பெற்ற தொகை ரூ. 13.26 கோடிகள். இது பகற்கொள்ளைதானே!

தனியார் மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், தாங்கள் விருப்பப்பட்டபடியே கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. ஆக, தனியார் கட்டணக் கொள்ளை என்பது நிறுத்தப்படவில்லை. ஒரு தனியார் பல்கலைக்கழகம் வருடத்திற்கு ரூ. 25 லட்சம் கட்டணம் வசூலிக்கிறது. இந்த பயிற்சி நிலையங்கள் பெரிய அளவு கட்டணம் வசூலிப்பதைப் பார்த்து, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் நீட் போன்ற போட்டித் தேர்வு பயிற்சி வணிகத்தில் நுழைகின்றது. ஆக, அம்பானி போன்றவர்கள் ஆதாயம் பெறவே இந்த ஏற்பாடு என்று பலரும் ஐயப்படுவது தவறா? கேள்வித் தாள்களிலும் குளறுபடிகள் ஏராளம். தமிழ் வினாத்தாளில் 68 வார்த்தைகள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளதால், 49 கேள்விகளுக்குத் தவறான பதில்கள் தமிழக மாணவர்கள் எழுதியுள்ளனர்.

சுமார் 5,700 மாணவர்கள் கேரளா, சிக்கிம், ராஜஸ்தான் போன்ற இடங்களுக்குத் தேர்வு எழுத அனுப்பப்பட்டதால் பல்வேறு உடல், மன, நிதி வேதனைக்கு உள்ளாயினர். 3 மாணவர்கள் தங்கள் தந்தையர்களை இழந்தனர். இப்படி மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் நடந்திருந்தால் பெரிய போராட்டமே வெடித்திருக்குமல்லவா! சி.பி.எஸ்.சி. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்டூ பொதுத் தேர்வு கேள்விகள் வெளி ஆனதற்கு எதிர்ப்பு வந்ததும், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு மீண்டும் தேர்வு இல்லை என்றும், பிளஸ்டூ வகுப்பு பொருளாதாரத்தாளுக்கு மட்டும் மீண்டும் தேர்வு என்றும் சந்தடி இல்லாமல் மத்திய அரசும், சி.பி.எஸ்.சி.யும் பிரச்னையை முடித்துவிட்டது. ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு லட்சத்து ஏழாயிரம் மாணவர்களில் 5700 மாணவர்களுக்கு தமிழகத்தில் தேர்வு எழுத இடமில்லை என்று சி.பி.எஸ்.சி. கூறியதை உச்சநீதி மன்றமும் ஆமோதித்தது.

அகில இந்திய அளவில், அனைத்து பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்துவதும், பிளஸ்டூ தேர்வு மதிப்பெண்ணுக்கு உரிய மதிப்பு அளிப்பதும், தேவையான அளவிற்கு புதிய அரசு மருத்துவக் கல்வி நிலையங்களை நாடு முழுவதும் உருவாக்குவதுமே இப்பிரச்னைக்கு தீர்வாக அமையும். பள்ளிகளைப் பயிற்சி மையங்களாக மாற்றக் கூடாது. வடமாநிலங்களில் பிளஸ் ஒன், பிளஸ்டூ தேர்வுக்கு மட்டும் பள்ளிக்கு மாணவர்கள் வருகின்றனர். மற்ற நேரங்களில் பயிற்சிப் பள்ளிகளிலேயே இருக்கின்றனர். ஆகவே, சமதளமற்ற நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளால் மாணவ சமுதாயத்திற்கு நியாயம் வழங்க இயலாது. மேலும், தேசிய ஒருமைப்பாட்டை குலைக்கும் நடவடிக்கையாக அமையும் என்ற பெருங்கவலையும் ஏற்படுகின்றது. இக்கவலை ஆழமானது. அர்த்தமுள்ளது.

உலக அளவிலும் கூட நிறைய பணச் செலவும், மாணவர்களுக்கு மனரீதியான, உடல் ரீதியான பிரச்னைகளை உருவாக்கும் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு எதிர்ப்பு அதிகமாகிறது. அமெரிக்காவில் "சாட்'' என்றும் "ஆக்ட்'' என்றும் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டாலும், கருப்பர்கள், ஹிஸ்பானிக் மற்றும் ஏழ்மையான குழந்தைகளால் தேர்ச்சி பெற இயலவில்லை. இது அநியாயம் என்று பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக 4300 பல்கலைக் கழகங்களில், 1000 பல்கலைக்கழகங்கள் நுழைவுத் தேர்வு இல்லை என அறிவித்து விட்டன. அமெரிக்க "டியூக்'' பல்கலைக்கழகம் ஆய்வில் நுழைவுத் தேர்வு மோசடிகள் 70%யும் கடந்து விட்டன என்று குறிப்பிடுகின்றது.

சீன நாட்டில் "கௌகாவ்'' எனும் கடுமையான நுழைவுத் தேர்வினால் மாணவர்கள் தற்கொலை அதிகரிக்கின்றது. நுழைவுத் தேர்வு நடத்தும் ஜுன் மாதத்தை "கருப்பு மாதம்'' என்று குறிப்பிடுகின்றனர். தென் கொரியாவில் நுழைவுத் தேர்வு மோசடிகளைப் பற்றி "ஏமாற்றுக்கலாச்சாரம்'' எனும் நூலில் டேவிட் கலஹன் என்பவர் எழுதியுள்ளார். நுழைவுத் தேர்வு நடக்கும்போது, தென் கொரியா முழுவதும் மயான அமைதி கடைபிடிக்கின்றது. ஆஸ்திரேலியாவில் 40% நுழைவுத்தேர்வு மோசடிகள் என கிரிபித் பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது. தாய்லாந்து, இங்கிலாந்திலும் நுழைவுத் தேர்வு பற்றிய கவலை மேலோங்குகிறது.

பாகிஸ்தானில் நுழைவுத் தேர்வு முறைகேடுகள் அதிகமானதால், "இறைவனுக்கு பயந்து தேர்வினை எழுதுங்கள்'' என்று பல இடங்களில் மசூதிகளில் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஆக உலகம் முழுவதிலும் மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வுகள் பற்றிய அச்சம் அதிகரிக்கும் நிலையில், நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் தேவையில்லை, நல்ல பலன்களை விட, பாதகம் அதிகரிக்கும். கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலில் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெறும் என்பதே நேர்மையான கல்வியாளர்களின் கருத்தாக அமைகின்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.