சென்னை: சென்னை, தண்டையார் பேட்டையில் உள்ள, இ.சி.ஐ., மெட்ரிக் பள்ளி மாணவர்கள், புனேக்கு சுற்றுலா சென்றனர்.
அங்கு அணைக்கட்டு பகுதியில் குளித்தபோது, மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில், பள்ளிக்கல்வித் துறையிடம் அனுமதி பெறாமல், பள்ளியில் இருந்து சுற்றுலா சென்றது தெரிய வந்தது. விபத்துகளை தடுக்கும் வகையில், சுற்றுலா செல்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை, மெட்ரிக் பள்ளி இயக்குனர் கண்ணப்பன் வெளியிட்டுள்ளார். அதன் விபரம்:* மெட்ரிக் பள்ளிகள், மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்லும் முன், கல்வி அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற வேண்டும். இரண்டு மாதங்களுக்கு முன், சுற்றுலா குறித்து திட்டமிட வேண்டும். ஒரு மாதத்திற்கு முன், அனுமதி பெற வேண்டும். குளம், குட்டை, ஆறு, ஏரி, அருவி மற்றும் கடல் போன்ற இடங்களுக்கு, சுற்றுலா செல்லக்கூடாது* நான்கு நாட்களுக்கு மேல் சுற்றுலா கூடாது. பெற்றோர், ஆசிரியர்கள் கூட்டம் கூட்டி, சுற்றுலா திட்டத்துக்கு ஒப்புதல் பெற வேண்டும். வானிலை நிலவரத்தை தெரிந்து, சுற்றுலா தேதி மற்றும் இடத்தை முடிவு செய்ய வேண்டும். சுற்றுலாவுக்கு வரும் மாணவர்களின் பெற்றோரிடம், கண்டிப்பாக ஒப்புதல் பெற வேண்டும்* பத்து மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர், பாதுகாப்புக்கு செல்ல வேண்டும். மாணவியருடன் ஆசிரியைகள், கட்டாயம் செல்ல வேண்டும். இரவு, 10:00 முதல், காலை, 4:00 மணி வரை, பஸ் அல்லது சாலை வழி பயணம் கூடாது. முதல் உதவி பொருட்களை, உடன் எடுத்து செல்ல வேண்டும். பாதுகாப்பான, உரிய உரிமம் பெற்ற வாகனத்தை பயன்படுத்த வேண்டும். உரிமம் மற்றும் அனுபவம் பெற்ற ஓட்டுனர்களை அழைத்து செல்ல வேண்டும்* மலைப்பகுதி என்றால், வனத்துறை அனுமதி பெற வேண்டும். மாணவர் எண்ணிக்கையை, அவ்வப்போது சரிபார்க்க வேண்டும். ஆசிரியர் துணையின்றி, மாணவர்களை தனியாக எங்கும் செல்ல அனுமதிக்க கூடாது* சுற்றுலா வரும்படி, மாணவர்களை கட்டாயப்படுத்த கூடாது. சிகிச்சை பெறும் மாணவர்களை, மருத்துவர் அனுமதி பெறாமல், சுற்றுலா அழைத்து செல்லக் கூடாது. சுற்றுலா செல்வது, லாப நோக்கமாக இருக்கக் கூடாது; கல்வி சார்ந்ததாகவே இருக்க வேண்டும். பாடம் நடத்துவது மற்றும் மாணவர்கள் படிப்பதற்கு, சுற்றுலா இடையூறாக இருக்க கூடாது.

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளன.