கோவை : மத்திய அரசின், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சார்பில், பள்ளி மாணவர்கள் மத்தியில் ஒளிந்திருக்கும், கண்டுபிடிப்பு திறனை வெளிக்கொணரும் வகையில், 'இன்ஸ்பயர் மானாக் ஸ்கீம்' என்ற பெயரில், ஆண்டுதோறும் கண்காட்சி நடத்தப்படுகிறது. 


இதில் பங்கேற்கும் மாணவர்கள், செயல்திட்ட முன்னுரையோடு, பதிவு செய்தால், தகுதிவாய்ந்த திட்டங்களை படைப்புகளாக்க, 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும். மாவட்ட, மாநில, தேசிய அளவில் வெற்றி பெறுவோருக்கு, பரிசுத்தொகையுடன், சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.வரும் கல்வியாண்டு முதல், சிறந்த படைப்புகளுக்கு செயல்வடிவம் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. 'ஸ்டார்ட் அப் இந்தியா' திட்டத்தில், மாணவர்களின் படைப்புகள் சந்தைப்படுத்தப்படவுள்ளன. 

இதற்கு பள்ளி வாரியாக, சிறந்த மூன்று மாணவர்களின் படைப்புகள் மட்டும், ஜூன், 30ம் தேதிக்குள் www.inspireawards-dst.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவை முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் கூறுகையில், ''பள்ளி மாணவர்களுக்கு நிதியுதவி அளித்து, படைப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படும், இன்ஸ்பயர் மானாக் ஸ்கீம் குறித்து, அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ''அரசு பள்ளி மாணவர்கள், இத்திட்டத்தில் சேர ஊக்குவிப்பது அவசியம். இதை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,'' என்றார்.