ஊதிய உயர்வு , பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில்  தலைமைச் செயலகத்தை முற்றுகையிட வந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர்களை தடுத்து நிறுத்தி சுமார் 1,460 பேரை கைது செய்யும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்று  தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் தடுக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றார்கள்.

மேலும் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட சென்ற ஜாக்டோ ஜியோ அமைப்பினர்களை  போலீசார் தடுத்து நிறுத்தியதால் அவர்கள் வாலாஜா சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர்  மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோர் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். இதனால் வாலாஜா சாலை சந்திப்பில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக சென்னை முழுவதும் 6000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று பிற்பகலில் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த போவதாக திட்டமிட்டுள்ளனர். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், எழும்பூர் ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகனங்களில் வந்து இறங்கிய ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.