சென்னை: 'ஒருவர் பெயர் கூட விடுபடவில்லை என்ற நிலையை ஏற்படுத்தும் வகையில், வாக்காளர் பட்டியல் தயார் செய்ய வேண்டும்' என, தேர்தல் அலுவலர்களுக்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, நேற்று முன்தினம், மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக கலந்துரையாடினார். அப்போது, ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வாக்காளர்கள் குறித்த விபரங்களை, கையடக்க இயந்திரத்தை பயன்படுத்தி, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் முறை குறித்து ஆலோசித்தார்.பின், அவர் கூறியதாவது:இம்முறையில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம், விரைவில், பயன்பாட்டிற்கு வரும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய வரும் விண்ணப்பங்கள் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில், ஒருவர் பெயர் கூட விடுபடவில்லை என்ற நிலையை ஏற்படுத்தும் வகையில், பட்டியலை தயார் செய்ய வேண்டும். 18 - 19 வயதிற்கு உட்பட்டவர்கள் அனைவரையும், வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.வாக்காளர் பட்டியல் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்காக, தேர்தல் கமிஷன் அறிவுரைப்படி, வாக்காளர் அறிவுசார் குழுக்களை ஏற்படுத்த வேண்டும். இதில், அரசியல் கட்சிக்கு அப்பாற்பட்ட, அனைத்து வயதுடைய வாக்காளர்களையும் சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.