முறைகேடு புகாரைத் தொடர்ந்து, அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளின் விரிவுரையாளர் பணியிடத்துக்கான தேர்வை தமிழக அரசு ரத்து செய்தது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,058 பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 16 -ஆம் தேதி தேர்வு நடந்தது. இந்தத் தேர்வில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 568 பேர் கலந்து கொண்டனர். இத்தேர்வின் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணியில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக தமிழக அரசு விசாரணை நடத்தி தேர்வை ரத்து செய்தது.
இதை எதிர்த்து தேர்வு எழுதிய சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "விரிவுரையாளர் தேர்வு முறைகேடு சம்பந்தமாக தமிழக அரசு ரகசிய விசாரணை மேற்கொண்டுள்ளது. 
இதில், 196 பேரின் விடைத்தாள்களில் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதற்காக விடைத்தாளை மதிப்பீடு செய்த நிறுவனம் லட்சக்கணக்கில் பணம் பெற்றிருப்பதும் தெரிய வந்துள்ளது. மத்திய குற்றப் பிரிவு போலீஸாரின் விசாரணையில், இத்தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை தமிழக அரசு ரத்து செய்தது சரியானது தான். 
ஊழல் என்பது மிகப்பெரிய நோய். இது நமது நாட்டில் புற்றுநோய் போன்று வளர்ந்து வருவது வேதனைக்குரியது. இதுபோன்ற நோயை பரவவிட்டால், நாட்டின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும்' என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.