புதுச்சேரி,:பிளஸ் 1 சிறப்பு துணை தேர்வு எழுத தனித்தேர்வர்கள் நாளை முதல் ஆன் லைனில் விண்ணப்பிக்கலாம் என கல்வித்துறை அறிவித்துள்ளது.இது குறித்து கல்வித்துறை இயக்குனர் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மார்ச்-ஏப்ரல் 2018 பிளஸ் 1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், வருகை புரியாதவர்களுக்காக வரும் ஜூலை5ம் தேதி முதல் 14ம் தேதி வரை, சிறப்பு துணை பொதுத்தேர்வு நடக்கிறது. இதில், தேர்வெழுத விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் பள்ளிகள், தேர்வு மையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
பள்ளி மாணவர்கள், பயின்ற பள்ளியின் மூலமாகவும், தனித் தேர்வர்கள், தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் மட்டுமே ஆன் லைனில் விண்ணப்பிக்க இயலும். விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் பள்ளிகள், தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று நாளை (7ம் தேதி) முதல் 11ம் தேதி வரை, ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தனியார் இன்டர்நெட் சென்டர்கள் மூலம் விண்ணப்பிக்க இயலாது.
தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாட்கள் குறித்தான விவரம் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வர் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில் அறிந்து கொள்ளலாம்.தேர்வர்களுக்கு தேர்வெழுத தற்போது வழங்கப்படும் அனுமதி முற்றிலும் தற்காலிகமானது எனவும், தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.