தமிழகத்தில் மக்காத பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். இந்தத் தடை அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக அவர் அறிவித்தார்.

இந்த அறிவிப்பின்படி, பிளாஸ்டிக் தாள்கள், தட்டுகள், தேநீர்-தண்ணீர் கப்கள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல், பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட உள்ளது.
சட்டப் பேரவையில் விதி 110-இன் கீழ், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி படித்தளித்த அறிக்கை:
ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5-ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டால் ஏற்படும் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்யும் வல்லுநர் குழுவை மறைந்த முதல்வர் ஜெயலலிதா அமைத்தார். 
அரசுக்குப் பரிந்துரைகள்: தமிழக அரசு அமைத்த வல்லுநர் குழு, ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக் கூடிய மக்காத பிளாஸ்டிக் பொருள்களான பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் குவளைகள் போன்ற பொருள்களைத் தடை செய்யவும் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் வாழை இழைகள், பாக்குமட்டைத் தட்டுகள், தாமரை இலைகள் போன்றவற்றின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் ஆலோசனை வழங்கியது.
எந்தப் பொருள்களுக்கு விலக்கு? அன்றாடம் பயன்படுத்தப்படும் பால், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருள்களுக்கான உறைகள் போன்ற பொருள்களுக்கான பிளாஸ்டிக் உறைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்க பரிந்துரைத்துள்ளது.
இந்தப் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டு பிளாஸ்டிக் பொருள்களான பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், தேநீர் மற்றும் தண்ணீர் குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல், பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் உள்ளிட்ட பொருள்களைத் தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியன தடை செய்யப்படுகிறது.
ஜனவரி 1 முதல் அமல்: பொது மக்களும், வியாபாரிகளும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக துணிப் பைகள், காகித உறைகள் போன்ற மக்கும் பொருள்களைப் பயன்படுத்தப் பழகிக் கொள்ள வசதியாக, இந்தத் தடை உடனடியாக நடைமுறைப்படுத்தப்படாது. அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
தடை செய்யப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் 
பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், தேநீர் மற்றும் தண்ணீர் குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல், பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள்.

எவற்றுக்கு விலக்கு? 
பால், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருள்களுக்கான உறைகள் போன்ற பொருள்களுக்கான பிளாஸ்டிக் உறைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.