பாட்னா:பீஹாரில் நடந்த, பிளஸ் 2 தேர்வில், பாடங்களின் மொத்த மதிப்பெண்ணை விட, கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் பள்ளி கல்வி வாரியத்தின் செயல்பாடு, தொடர்ந்து சர்ச்சைக்குரியதாகி வருகிறது.சில ஆண்டுகளுக்கு முன், ௧௦ம் வகுப்பு தேர்வில், பெற்றோரே, தங்கள் பிள்ளைகளுக்கு, தேர்வில் காப்பியடிக்க உதவி செய்தது, பரபரப்பை ஏற்படுத்தியது.இரண்டு ஆண்டுகளுக்கு முன், பிளஸ் ௨ தேர்வில் முதலிடம் பிடித்த ரூபி ராய் என்ற மாணவிக்கு, அடிப்படை விஷயங்கள் கூட தெரியாதது, பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.இந்நிலையில், பீஹார் பள்ளி தேர்வு வாரியம், பிளஸ் ௨ தேர்வு முடிவுகளை, நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில் தேர்வு எழுதிய மாணவர்கள் சிலருக்கு, தாங்கள் எழுதிய தேர்வில், மொத்த மதிப்பெண்ணைக் காட்டிலும், கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டிருந்தது.அர்வால் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் பீம் குமார் கூறுகையில், ''கணித பாடத்திற்கு மொத்த மதிப்பெண், 35. ஆனால் நான், 38 மதிப்பெண் பெற்றுள்ளதாக, தேர்வு முடிவு வெளியாகிஉள்ளது. ''இதில் எனக்கு ஆச்சரியம் இல்லை. காரணம், இது போன்ற தவறுகள் தொடர்ந்து நடக்கின்றன,'' என்றார்.கிழக்கு சாம்பரன் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் சந்தீப் ராஜ் கூறுகையில், ''இயற்பியல் பாடத்திற்கு மொத்த மதிப்பெண், 35. நான், 38 மதிப்பெண் பெற்றுள்ளேன்; இது எப்படி சாத்தியமாகும்,'' என்றார்.தேர்வுக்கே வராத மாணவர்கள் சிலருக்கு, மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பது, மாணவர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.1 மார்க்கிற்காக மறுமதிப்பீடுகர்நாடகாவில், ௧௦ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின.

இதில், மொத்தம் உள்ள, 625மதிப்பெண்ணுக்கு, 625 மதிப்பெண் பெற்று, முதலிடத்தை, யஷ்ஹாஸ், சுதர்சன் என்ற மாணவர்கள் பெற்றுள்ளனர். 624 மதிப்பெண் பெற்று, இரண்டாம் இடத்தை, முகமது கைப் முல்லா என்ற மாணவர் பிடித்துள்ளார்.எனினும், முதலிடத்தை பிடிக்க முடியாதது, கைப்புக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதனால், தன் விடைத்தாள்களை, மறு மதிப்பீடு செய்ய, விண்ணப்பிக்க போவதாக, அந்த மாணவர் தெரிவித்துள்ளார்.