அரசு தேர்வு தொடர்பான பணிகளுக்கு, மூன்று ஆண்டுகளாக செலவிட்ட, 35 கோடி ரூபாய் கிடைக்காமல், தலைமை ஆசிரியர்கள் திணறி வருகின்றனர்.
தமிழக பள்ளி கல்வித்துறையின் ஒரு அங்கமான, அரசு தேர்வுத்துறை சார்பில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. பிளஸ் 1க்கு, 2017 - 18 முதல், பொதுத் தேர்வு அறிமுகமாகி உள்ளது. பொதுத் தேர்வை நடத்தும் முன், ஆயத்த பணிகளை, பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்வர். தேர்வுக்கு முன், மாணவர்களின் விபரங்கள் அடங்கிய முகப்புத்தாளுடன், ஒவ்வொரு மாணவரும், விடை எழுதுவதற்கான வெற்று முதன்மை விடைத்தாள்களை இணைத்து தைக்க வேண்டும்.ஒவ்வொரு பள்ளியும், அவரவர் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, இந்த பணிகளை மேற்கொள்ளும். முகப்புத்தாள் தைக்க, ஒரு மாணவருக்கு ஒரு ரூபாய்; விடைத்தாளை பாதுகாப்பாக பண்டல் கட்ட, துணி மற்றும் ஸ்டேஷனரி பொருட்கள் வாங்க, 63 ரூபாய் செலவாகும்.செலவு தொகையை, தலைமை ஆசிரியர்கள் முதலில் செலவிட்டு, பின் தேர்வுத் துறையிடம் பெற வேண்டும். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், இந்த தொகையை பெற்றுத் தர வேண்டும். மூன்று ஆண்டுகளாக இந்த தொகையை வழங்காமல், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் இழுத்தடிப்பதாக, தலைமை ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ரூ.35 கோடி : இது குறித்து, தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: ஒவ்வொரு தலைமை ஆசிரியரும், தங்கள் சம்பள பணத்தில் இருந்து, ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளோம். மூன்று ஆண்டுகளில், மாநிலம் முழுவதும், 35 கோடி ரூபாய் செலவாகி உள்ளது. இந்த பணம், இதுவரை எங்களுக்கு கிடைக்கவில்லை.இந்த நிதியை, தேர்வுத்துறை வழங்காமல் உள்ளதா அல்லது பணத்தை பெற்று, மாவட்ட கல்வி அதிகாரிகள் எங்களுக்கு தரவில்லையா என தெரியவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்