ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வு செய்யும் முடிவு அரசின் பரிசீலனையில் இருப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பினார். அப்போது, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக, வேலைவாய்ப்பினை இளைஞர்கள் பெற முடியாத நிலை கவலை அளிப்பதாக உள்ளது. கடந்த ஆண்டு தேர்வு வாரியம் மூலமாகத் தேர்ச்சி பெற்றோருக்கு சான்றிதழ்கள் இதுவரை வழங்கப்படவில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையை தயவு செய்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 
இதற்கு அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பதில்: கடந்த 2013-ஆம் ஆண்டு நடந்த தகுதித் தேர்வில் இடைநிலை ஆசிரியர்கள் 42 ஆயிரத்து 724 பேர் தேர்வு பெற்றார்கள். அதில், 13 ஆயிரத்து 781 பேர் பணியிடங்களைப் பெற்றனர். மீதம் உள்ளோருக்கு ஏழு ஆண்டுகள் அவகாசம் இருக்கிறது. பட்டதாரி ஆசிரியர்களில் 52 ஆயிரத்து 646 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 20 ஆயிரத்து 275 பேர் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
அரசின் கடமையல்ல: தகுதித் தேர்வைப் பொருத்தவரையில், தேர்வர்களுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்க முடியுமே தவிர, அவர்கள் அத்தனை பேருக்கும் வேலைவாய்ப்பு அளிப்பது என்பது அரசின் கடமையல்ல. ஆனாலும், 2014-ஆம் ஆண்டு 4 ஆயிரத்து 938 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வில் சான்றிதழ் வழங்குவது குறித்துப் பேசப்பட்டது. இதுதொடர்பான விசாரணை, காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைந்து அந்தப் பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு வெயிட்டேஜ் முறையை நீக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. அது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.