சென்னை:'மதிப்பெண் குறைந்த மாணவர்களுக்கு, மாற்றுச் சான்றிதழ் வழங்கி, கட்டாயமாக வெளியேற்றுவதை தவிர்க்க வேண்டும்' என, தனியார் பள்ளிகளை, மெட்ரிகுலேஷன் இயக்குனர் எச்சரித்துள்ளார்.

தமிழக மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர், கண்ணப்பன், தனியார் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:• கடந்த கல்வியாண்டு முதல், பிளஸ் ௧ படிப்புக்கு, பொதுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாணவர்கள், அதே பள்ளியில், பிளஸ் ௨ வரை, படிக்க வேண்டும்• பிளஸ் 1 தேர்வில், குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களையும், சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்களையும், பள்ளி நிர்வாகத்தினர், கட்டாயமாக வெளியேற்ற முயற்சிப்பதாக புகார்கள்வந்துள்ளன.மாணவர்களை கட்டாயப்படுத்தி, மாற்று சான்றிதழ் கொடுக்கும் முயற்சியில், எந்த பள்ளியும் ஈடுபடக்கூடாது. இந்த அறிவிப்பை மீறி செயல்பட்டால், அந்த பள்ளிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்• பிளஸ் 1ல், தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளித்து, அடுத்து வரும் துணை தேர்வுகளில், அவர்கள் தேர்ச்சி பெற, பள்ளி நிர்வாகத்தினர் முயற்சிக்க வேண்டும். குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களையும், தேர்ச்சி பெறாதவர்களையும் வெற்றி பெற வைப்பதே, பள்ளியின் முதல் கடமையாக இருக்க வேண்டும்• பத்தாம் வகுப்பில், அதே பள்ளியில் படித்த மாணவர்களுக்கு, பிளஸ் ௧ சேர்க்கையில் முன்னுரிமை அளிக்க வேண்டும். குறைந்த மதிப்பெண்ணை காரணம் காட்டி, அவர்களை புறக்கணிக்கக்கூடாது.இந்த உத்தரவை, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் நடைமுறைப்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது