தமிழகத்தில் கால்நடை மருத்துவப் படிப்புக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் திங்கள்கிழமையுடன் (ஜூன் 18) முடிவடைகிறது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளநிலை கால்நடை மருத்துவம் - கால்நடை பராமரிப்பு (பிவிஎஸ்சி மற்றும் ஏஹெச்) மற்றும் உணவுத்தொழில்நுட்பம், கோழியின உற்பத்தி தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம் ஆகிய பி.டெக்., படிப்புகளுக்கும் மே 21-ஆம் தேதி முதல் ஜூன்11-ஆம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவுசெய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. 
கால்நடை மருத்துவம் - கால்நடை பராமரிப்பு படிப்புக்கு சென்னை, நாமக்கல், ஒரத்தநாடு, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள 4 அரசுக் கல்லூரிகளில் மொத்தம் 360 இடங்கள் உள்ளன. பி.டெக்., உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு 40 இடங்கள், பி.டெக்., கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு 40 இடங்கள், பி.டெக்., பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு 20 இடங்கள் என மொத்தம் 460 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. 
இந்தப் படிப்புகளுக்கு சுமார் 15 ஆயிரம் பேர் இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவு செய்துள்ளனர். இணையதளத்தில் பதிவு செய்த விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க திங்கள்கிழமை (ஜூன் 18) கடைசி நாளாகும். இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் பல்கலைக்கழகத்துக்குச் சென்று சேர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு, ஜூலை முதல் வாரத்தில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.