பள்ளிப் பாடத் திட்டத்தில் முதியோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பகுதிகள் இடம்பெறுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் வி.எஸ். நடராஜன் முதியோர் அறக்கட்டளை தலைவர் டாக்டர் வி.எஸ். நடராஜன் வலியுறுத்தினார்.

உலக முதியோர் கொடுமை ஒழிப்பு தினம் ஆண்டுதோறும் ஜூன் 15 -ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, டாக்டர் வி.எஸ். நடராஜன் முதியோர் அறக்கட்டளை சார்பில் சென்னை மேற்கு அண்ணா நகரில் உள்ள எஸ்பிஓஏ பள்ளியில் உலக முதியோர் கொடுமை ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் டாக்டர் வி.எஸ். நடராஜன் பேசியது:
இன்றைய காலக்கட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் பலர் தங்களது குடும்பத்தினரால் மனதளவிலும், உடல் அளவிலும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அதிலும், குறிப்பாக நோய்வாய்ப்பட்ட முதியோருக்குத் தேவையான சிகிச்சைகள் உரிய நேரத்தில் கிடைக்காததால் அவர்கள் இறக்கும் நிலை ஏற்படுகிறது.
பல வீடுகளில் வயது முதிர்ந்த பெற்றோரின் சொத்துகளை யும், ஓய்வூதியத்தையும் அனுபவிக்கும் பிள்ளைகள் அவர்களைச் சரிவர கவனிப்பதில்லை. முதியோருக்கு இறுதிக் காலத்தில் அன்பும், அரவணைப்பும் மட்டுமே தேவைப்படுகிறது. இதை நினைவில் கொண்டு பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களை நல்ல முறையில் கவனிக்க வேண்டும்.
முதியோர் பாதுகாப்பு குறித்து ஒவ்வொரு குழந்தையும் அறிந்து கொள்வது இன்றைய காலக்கட்டத்தில் மிக அவசியமான ஒன்று. அதைக் கருத்தில் கொண்டு 5 -ஆம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிப் பாடத் திட்டத்தில் முதியோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பகுதிகளை இடம்பெறச் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார் நடராஜன்.
இதைத் தொடர்ந்து, முதியோர் பாதுகாப்பு குறித்து மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். மேலும் தமிழ், ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ள முதியோரை மதிப்போம்' என்ற நூல் வெளியிடப்பட்டது. முதியோர்கள் எந்தெந்த வகையில் அவமதிக்கப்படுகின்றனர் என்பது குறித்த குறும்படமும் திரையிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், தமிழக அரசின் சமூக நலத் துறை இயக்குநர் அமுதவல்லி, 500 -க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்