பள்ளிக்கு  'சீதனம்' வழங்கிய பெற்றோர்

காரைக்குடி: அரசு பள்ளிக்கு, மூன்று லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை, மாணவர்களின் பெற்றோர், 'சீதனமாக' வழங்கினர். காரைக்குடி, ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலை பள்ளியில், 'கல்வி சீர்' வழங்கும் விழா நேற்று நடந்தது. நடப்பாண்டில், ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பில் புதிதாக சேர்ந்த மாணவர்களின் பெற்றோர், பள்ளிக்கு தேவையான பொருட்களை, தலைச்சுமையாக, பூ, பழங்களுடன் ஊர்வலமாக கொண்டு வந்து வழங்கினர். பட்டாசு வெடித்து, ஆரத்தி எடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர். டெஸ்க், பெஞ்ச், பலகை, ஸ்டீல் சேர், பிளாஸ்டிக் வாளி, குப்பைதொட்டி, செஸ் அட்டை, பிரிண்டர், மடிக்கணினி, கணினி மேஜை, சேர், சுவர் கடிகாரம், புரஜெக்டர் ஸ்கிரீன், ஸ்டீல் அலமாரி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள், பள்ளிக்கு சீதனமாக வழங்கப்பட்டன.