அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரையிலும், ஆறாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கான சீருடையில் மாற்றம் கொண்டு வரப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.59.50 லட்சம் மதிப்பிலான ஜெ.ஜெ. கலையரங்கு, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 1.20 கோடி மதிப்பிலான ஜெ.ஜெ. புதிய வகுப்பறைக் கட்டடம் ஆகியவற்றை திறந்துவைத்து முதல்வர் கே.பழனிசாமி பேசியது:
கல்வி வல்லுநர்களைக் கொண்டு புதிய பாடத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 2018-19-ஆம் ஆண்டு வரவு- செலவுத் திட்டத்தில் கல்வித் துறைக்கு அதிக அளவில் ரூ.27 ஆயிரத்து 205 கோடியே 88 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. 
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத் திட்டங்கள் வழங்க ரூ.967.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப 3,090 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 2,939 மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் ரூ.438 கோடியில் ஏற்படுத்தப்பட உள்ளன.
பல்வேறு தொடர் முயற்சிகளால், தொடக்க நிலை வகுப்புகளில் 2011-12-ஆம் ஆண்டில் 99.36 நிகர சேர்க்கை விகிதம் 2017-18-ஆம் ஆண்டில் 99.86 சதவீதமாக உயர்ந்துள்ளது. உயர் தொடக்க நிலை வகுப்புகளில் 2011- 12-ஆம் ஆண்டில் 99.63 நிகர சேர்க்கை விகிதம், 2017-18-ஆம் ஆண்டில் 99.22 சதவீதமாக உயர்ந்துள்ளது. இடைநிற்றல் விகிதம் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது. 1 முதல் 5 மற்றும் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளின் சீருடையில் மாற்றம் கொண்டு வரப்படும் என்றார்.