தமிழில் நீட் எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என்று மதுரை ஹைகோர்ட் கிளை இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.


மதுரை: தமிழில் நீட் எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என்று மதுரை ஹைகோர்ட் கிளை இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

நீட் தேர்வு வினாத்தாள் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டதில் நிறைய குளறுபடிகள் செய்யப்பட்டுள்ளது . இதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி ராஜ்யசபா உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், ஹைகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார்.

அதன்படி, நீட் தேர்வை தமிழ் வழி கேள்வியில் நிறைய தவறுகள் இருக்கிறது. 49 வினா-விடைகள் தவறாக இருந்தது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் 196 மதிப்பெண் குறைவாக கிடைக்கும் என்றார். இந்த 196 மதிப்பெண்களை வழங்கவும், நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது என்றும் கோரிக்கை வைத்து வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கில் சிபிஎஸ்இ தரப்பை ஹைகோர்ட் கிளை கண்டித்து இருந்தது. அதேபோல் சிபிஎஸ்இ பெரிய அளவில்சர்வாதிகாரத்தனத்துடன் செயல்பட விரும்புகிறதா என்றும் கேள்வி எழுப்பி இருந்தது.

இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. அனைத்து தரப்பு வாதமும் முடிந்துள்ள நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் இன்று காலை தீர்ப்பளித்தனர்.

அதன்படி, தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண்வழங்க வேண்டும். 49 வினா-விடைகள் தவறாக இருந்ததால் கேள்விக்கு 4 மதிப்பெண் என்று மொத்தமாக தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கூடுதலாக 196 மதிப்பெண் வழங்க வேண்டும்.

அதோடு புதிய மதிப்பெண் அடிப்படையில் சிபிஎஸ்இ புதிய தரவரிசை பட்டியல் உருவாக்க வேண்டும். அதன்பின் கலந்தாய்வு தேதிகளை அறிவிக்க வேண்டும் என்று ஹைகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தீர்ப்பால் மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.