சென்னை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், குரூப் - 1 தேர்வுகளுக்கான, வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள, ஊழியர் மற்றும் அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், போட்டிதேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில், குரூப் - 1; குரூப் - 1 ஏ; குரூப் - 1 பி ஆகிய பதவிகளுக்கு, வயது உச்சவரம்பை, மத்திய பணியாளர் தேர்வாணையமான, 'ஸ்டாப் செலக் ஷன் கமிஷனில்' இருப்பது போல, உயர்த்த வேண்டும் என, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்தனர்.அதன்படி, வயது வரம்பு உயர்த்தப்படும் என, சட்டசபையில், முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். இதை தொடர்ந்து, வயது வரம்பு உயர்வுக்கான அரசாணை, நேற்று வெளியிடப்பட்டது. தமிழக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை செயலர் ஸ்வர்ணா, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.அதன்படி, குரூப் - 1 தேர்வுகளுக்கு, இனி குறைந்தபட்ச வயது, 21 ஆகவும், அதிகபட்ச வயது, பொது பிரிவினருக்கு, 32 ஆகவும், மற்றவர்களுக்கு, 37ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த அரசாணையால், குரூப் - 1ல் உள்ள, டி.எஸ்.பி., துணை கலெக்டர், மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, மாவட்ட கலெக்டரின் உதவியாளர் உட்பட பல பதவிகளுக்கு, வயது வரம்பு உயர்ந்துள்ளது.குரூப் - 1 ஏ பிரிவில், உதவி வன பாதுகாவலர், குரூப் - 1 பி பிரிவில், அறநிலையத்துறை உதவி கமிஷனர் ஆகிய பதவிகளுக்கும், கூடுதல் வயது வரம்பில், தேர்வு எழுத வாய்ப்புகள் கிடைக்கும்