கடையநல்லூர்: அரசுக்கு ஏற்பட்டு வரும் நிதி இழப்பைக் கருத்தில் கொண்டு முதுகலை ஆசிரியர்களுக்கு கண்டிப்பாக 28 பாட வேளைகளை ஒதுக்க கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், பல பள்ளிகளில் இந்த அறிவிப்பு காற்றில் பறக்க விடப்பட்டுள்ளதால் மக்களின் வரிப்பணம் வீணாகி வருகிறது.
 போதிய பாடவேளைகள் இல்லாமல் முதுகலை ஆசிரியர்கள் பணியாற்றுவதால், அரசுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டு வருவதாக மாநில கணக்காயர் தணிக்கையில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, நிதி இழப்பை சரி செய்யும் நோக்கில், கல்வித் துறை பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. அதன் ஒரு பகுதியாக முதுகலை ஆசிரியர்கள் உள்பட அனைத்து வகை ஆசிரியர்களும் குறைந்தபட்சம் 28 பாட வேளைகள் பணியாற்ற வேண்டும் என கல்வித் துறை உத்தரவிட்டது.
 இது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் (ந.க.எண்.055838-நாள் 18-4-2018) சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். அதில், முதுகலை ஆசிரியராகப் பணியாற்றும் ஆசிரியர்கள், மேல்நிலை வகுப்புகளில் 28 பாடவேளைகள் போதிக்க வேண்டும். மேல்நிலை வகுப்புகளில் போதிய பாட வேளை இல்லை என்றால் அந்த முதுகலை ஆசிரியர்களை கீழ்நிலை வகுப்புகளுக்கு, அதாவது 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளுக்கு பாடங்களை கற்பிக்கும் வகையில் பாட வேளைகள் ஒதுக்க வேண்டும்.
 மேல்நிலைப் பிரிவுகளை பொருத்தவரை, நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் பள்ளி அமைந்திருந்தால் குறைந்தபட்சம் 30 மாணவர்கள் இருக்க வேண்டும். ஊரகப் பகுதிகளில் குறைந்தபட்சம் 15 மாணவர்கள் இருக்க வேண்டும். குறைந்தபட்ச மாணவர்கள் இல்லாமல் நடைபெற்று வரும் பாடப் பிரிவுகளை நீக்கிவிட்டு, அதில் பயின்று வரும் மாணவர்களை அருகேயுள்ள பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
 ஆங்கிலவழிப் பிரிவுகள்
 அரசுப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் நிர்ணயம் செய்யப்படுவது போன்றே, ஆங்கிலவழிக் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தனியே ஆசிரியர்கள் நிர்ணயம் செய்திட வேண்டும். ஆங்கிலவழிப் பிரிவுகளில் ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தபட்சம் 15 மாணவர்கள் இருக்க வேண்டும். அதற்கு குறைவாக இருந்தால், அந்த மாணவர்களை அருகேயுள்ள பள்ளிகளில் செயல்படும் ஆங்கிலப் பிரிவில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 1 முதல் 6-ஆம் வகுப்பு வரையுள்ள பள்ளிகளில் 60 மாணவர்கள் இருப்பின் இரண்டு ஆசிரியர்களும், 61 முதல் 90 மாணவர்கள் வரை இருப்பின் 3 ஆசிரியர்களும், 91 முதல் 120 மாணவர்கள் வரை இருந்தால் 4 ஆசிரியர்களும் நியமிக்கப்பட வேண்டும். கூடுதலாக இருக்கும் ஒவ்வொரு 30 மாணவருக்கும் ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும்.
 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி குறைந்தபட்சம் 3 ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட வேண்டும். ஒரு வகுப்பில் 35 மாணவர்கள் இருந்தால் அதை ஒரு பிரிவாக கணக்கில் கொண்டு ஓர் ஆசிரியர் பணியிடம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். ஐம்பதுக்கு மேல் மாணவர்கள் இருந்தால் அவ்வகுப்பை இரண்டாகப் பிரித்து, கூடுதல் பிரிவை ஏற்படுத்தலாம்.
 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையில் 5 ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட வேண்டும். 9 மற்றும் 10-ஆம் வகுப்பில் தலா 40 மாணவர்கள் இருப்பின் வகுப்பிற்கு ஓர் ஆசிரியர் நிர்ணயம் செய்ய வேண்டும். மாணவர்கள் எண்ணிக்கை 60க்கு மேல் கூடினால் அவ்வகுப்பை இரண்டாகப் பிரித்து கூடுதல் பிரிவு ஏற்படுத்த வேண்டும்.
 வாரத்துக்கு குறைந்தபட்சம் 28 பாடவேளைகள் கண்டிப்பாக ஒதுக்கப்பட வேண்டும். பாடவேளைகள் முறையாக ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
 காற்றில் பறக்கும் அறிவிப்புகள்
 நிதி இழப்பை சரிசெய்யும் நோக்கில் கல்வித் துறை எடுத்துள்ள முடிவை பொதுமக்கள் வரவேற்று வரும் நிலையில், பல பள்ளிகளில் இத்தகைய அறிவிப்புகளை பின்பற்றுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. முதுகலை ஆசிரியர்கள் பலர் மேல்நிலை வகுப்புகளில் போதிய பாடவேளைகள் இல்லாதபோதும், கீழ் வகுப்புகளுக்கு செல்வதை கெüரவக் குறைச்சலாக பார்க்கும் நிலை உள்ளதால், பட்டதாரி ஆசிரியர்களே வழக்கம் போல் அந்தப் பாட வகுப்புகளுக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
 இதனால், குறைந்தபட்சமாக 28 பாடவேளைகள் கூட இல்லாமல் முதுகலை ஆசிரியர்கள் பணியாற்றும் நிலையே பல பள்ளிகளிலும் தொடருகிறது. சில பள்ளிகளில் கண்துடைப்பாக நீதி போதனை வகுப்புகள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.
 கல்வித் துறையில் உயரிய அதிகாரியான இயக்குநரின் உத்தரவைக் கூட செயல்படுத்த முடியாமல் சில தலைமையாசிரியர்கள் தவித்து வருகின்றனர்.
 ஏற்கெனவே, நிதி நெருக்கடியில் தவித்துவரும் அரசு, நிதி இழப்பைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
 - வி. குமாரமுருகன்