உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால், தமிழகத்திற்கு, மத்திய அரசின், 2,800 கோடி ரூபாய் நிதியுதவி கிடைப்பது சிக்கலாகி உள்ளது.


உள்ளாட்சி, தேர்தல், நடக்காததால், சிக்கல், தமிழகத்திற்கு ரூ.2,800 கோடி, நிறுத்தம்


உள்ளாட்சி பணிகளுக்காக, அனைத்து மாநிலங்களுக்கும், அடிப்படை நிதி, செயல்பாட்டு நிதி என, இரண்டு வகையான நிதி உதவியை, மத்திய அரசு அளித்து வருகிறது. உள்ளாட்சி தேர்தல் நடத்தி, தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகள் இருந்தால் மட்டுமே,

இந்த நிதியை வழங்க வேண்டும் என, 14வது நிதிக்கமிஷன், தன் விதிமுறைகளில் தெளிவுபடுத்தி உள்ளது.

தமிழகத்தில், உள்ளாட்சி அமைப்புகளின் ஐந்தாண்டு பதவிக்காலம், 2016 அக்டோபரில் முடிந்தது. இதையடுத்து, உள்ளாட்சி தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடந்தன.இட ஒதுக்கீடு தொடர்பாக, தி.மு.க., தொடர்ந்த வழக்கால், மனுதாக்கல் முடிந்த நிலையில், தேர்தல்ரத்து செய்யப்பட்டது. அதன்பின், இதுவரை உள்ளாட்சி தேர்தல் நடக்கவில்லை.

உள்ளாட்சி தேர்தல் நடத்தாததை சுட்டிக்காட்டி, நடப்பு ஆண்டிற்கு தர வேண்டிய, 1,608 கோடி ரூபாயில், 758 கோடிரூபாயை மட்டுமே, மத்திய அரசு வழங்கியுள்ளது.இதேபோல, 2017 - 18ல் கிடைக்க வேண்டிய, 1,950 கோடி ரூபாயும் கிடைக்கவில்லை. 


இரண்டு ஆண்டுகளில், தமிழக அரசுக்கு கிடைக்க வேண்டிய, 2,800 கோடி ரூபாய் நிதியை, மத்திய அரசு நிறுத்தி உள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில், குடிநீர், சாலை, மின்விளக்கு உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளை பூர்த்தி செய்வதில், அரசுக்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது. மத்திய அரசின் நிதியை பெற, தமிழக அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.