உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு ஊழியர்கள் முறையாக பணியாற்றவி்ல்லை என்றால் 50 வயதில் கட்டாய ஓய்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பாஜக வென்றது. அக்கட்சி சார்பில் யோகி ஆதித்யநாத் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். யோகி ஆதித்யநாத் முதல்வராக பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி முடிவுகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் அரசு ஊழியர்கள் முறையாக பணியாற்றவில்லை என்று அனைத்து தரப்பினரும் குற்றம்சாட்டி வந்தனர். இதனை தடுக்க உத்தரப்பிரதேச அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு, கூடுதல் தலைமை செயலாளரிடம் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், 50 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்களை உயர் அதிகாரிகள் கண்காணிக்கும்படி குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் முறையாக பணியாற்றாத 50 வயதுக்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்படும் என்றும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் 1986-ம் ஆண்டு முதல் நடப்பில் இருந்து வருவதாகவும், ஆனால் பல்வேறு அரசு அலுவலகங்களில்  பின்பற்றப்படவில்லை என்றும் இனி வரும் காலங்களில் இந்த சட்டம் தீவிரமாக பின்பற்றப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.