தனியார் பள்ளிகளை நிர்வகிக்கும் வகையில், மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கி பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையில் உள்ள குறைபாடுகளை திருத்தி வெளியிட, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் நிர்வாக அமைப்பை மாற்றி அமைக்கும் வகையில், மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு நிர்வாகரீதியிலான அதிகாரம் வழங்கி தமிழக பள்ளிக் கல்வித் துறை கடந்த மே மாதம் அரசாணை பிறப்பித்தது.

விதிகளை மீறி: இந்த அரசாணையின்படி அனைத்துப் பள்ளிகளையும் நிர்வகிக்கும் அதிகாரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி, ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் சங்கம் மற்றும் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது.


இந்த வழக்கு நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எம்.தண்டபாணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளை நிர்வகிக்க ஏற்கெனவே போதுமான சட்டங்கள் உள்ள நிலையில், விதிகளை மீறி இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது, சட்டவிரோதமானது என வாதிடப்பட்டது.

அரசுத் தரப்பு வாதம்: இந்த அரசாணை தனியார் பள்ளிகளின் நிர்வாகத்தை கண்காணிக்கவும், கல்வித் தரத்தை மேம்படுத்தவுமே பிறப்பிக்கப்பட்டதாக அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மத்தியில் நிர்வாக வசதிக்காக ஒரே மாதிரியான நடைமுறைகளை மேற்கொள்ள இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. இந்த அரசாணையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் தேவையான திருத்தங்களைச் செய்து, புதிய அரசாணையை இரண்டு மாத காலத்துக்குள் வெளியிட வேண்டும். மனுதாரர்கள் தங்களது தரப்புக் குறைகளை அரசிடம் தெரிவிக்க வேண்டும்' என உத்தரவிட்டனர்