பொறியியல் கல்விக் கட்டண ஆய்வுக் குழுவை மீண்டும் நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

2015-ஆம் ஆண்டுக்குப் பின் முடங்கியிருந்த இந்த ஆய்வுக் குழு, இப்போது மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களிடம் பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக வந்த தொடர் புகார்களைத் தொடர்ந்து, ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியன் தலைமையில் கட்டண நிர்ணயக் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்தது. 
இந்தக் குழு நிர்ணயிக்கும் கட்டணத்தை மட்டுமே, சுயநிதி கல்லூரிகள் மாணவர்களிடம் வசூலிக்கவேண்டும்.
கட்டணம் எவ்வளவு? அதாவது, சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் கலந்தாய்வு மூலம் சேரும் மாணவர்கள் தரச் சான்று பெற்ற படிப்புகளில் சேரும்போது ஆண்டுக்கு ரூ. 55 ஆயிரம் கட்டணம் மட்டும் செலுத்தினால் போதுமானது. தரச் சான்று இல்லாத படிப்பில் சேரும் மாணவர்கள் ரூ. 50 ஆயிரம் ஆண்டுக் கட்டணம் செலுத்தவேண்டும். 
கலந்தாய்வு மூலமாக அல்லாமல், நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சுயநிதி கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் தரச் சான்று பெற்ற படிப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ. 87 ஆயிரம் செலுத்தினால் போதுமானது. தரச் சான்று இல்லாத படிப்பில் சேரும் மாணவர்கள் ரூ. 85 ஆயிரம் ஆண்டுக் கட்டணம் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தைத் தாண்டி கூடுதலாக கல்லூரிகள் வசூலிக்கக் கூடாது.
கட்டண ஆய்வுக் குழு: இவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டும் சுயநிதி கல்லூரிகளில் வசூலிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, கட்டண ஆய்வுக் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்தது. 
இந்தக் குழு, சுயநிதி கல்லூரிகளில் நேரடியாகவும், மாணவர்களிடமிருந்தும் வரும் கூடுதல் கட்டணம் தொடர்பான புகாரின் அடிப்படையிலும் நேரடியாக ஆய்வு நடத்தி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும். அதனடிப்படையில், சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அமைக்கப்படும் ஆய்வுக் குழு ஓராண்டுக்கு மட்டுமே செல்லத்தக்கத்தாக இருக்கும். எனவே, ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்படும் அல்லது மாற்றியமைக்கப்படும். கடைசியாக 2013-14 கல்வியாண்டில் இந்த கட்டண ஆய்வுக் குழு மாற்றியமைக்கப்பட்டு அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ்.செல்லதுரை தலைமையில் புதிய குழு அமைக்கப்பட்டது. அதன் பிறகு, இந்தக் குழு புதுப்பிக்கப்படாமலும், மாற்றியமைக்கப்படாமலும் முடங்கியிருந்தது. 
இதனால், சுயநிதி கல்லூரிகள் மாணவர்களிடம் தடையின்றி கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்வதாகவும், மீண்டும் இந்த ஆய்வுக் குழுவை அமைத்து, கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.
அதனடிப்படையில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆய்வுக் குழு புதுப்பிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ்.செல்லதுரை தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதிய ஆய்வுக் குழு அமைக்கப்படும் வரை, பேராசிரியர் செல்லதுரை தலைமையிலான குழு செயல்பாட்டில் இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகாரை எப்படித் தெரிவிப்பது?: இது குறித்து ஆய்வுக் குழு தலைவர் செல்லதுரை கூறுகையில், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக மாணவர்களும், பெற்றோரும் இந்தக் குழுவிடம் அச்சமின்றி புகார் தெரிவிக்கலாம். 
புகார் தெரிவிப்பவரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். 94441 40138 என்ற செல்லிடப்பேசியில் நேரடியாக என்னைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். அல்லது tncapitation@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு புகாரை அனுப்பலாம். புகாரின் அடிப்படையில் உடனடியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.