சென்னை:நகராட்சி கமிஷனர், சார் - பதிவாளர் உட்பட, 23 பதவிகளில், 1,199 காலியிடங்களுக்கு, 'குரூப் - 2' தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இதற்கு, செப்., 9 வரை, 'ஆன்லைனில்' பதிவு செய்யலாம்.

தமிழக அரசு துறைகளில், 'குரூப் - 2' பிரிவில், 23 வகையான பதவிகளில் காலியாக உள்ள, 1,199 இடங்களை நிரப்ப, நவ., 11ல், முதல்நிலை தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்டது.
இந்த தேர்வுக்கு, நேற்று முதல் ஆன்லைன் பதிவு துவங்கியுள்ளது. அடுத்த மாதம், 9ம் தேதி வரை பதிவு செய்யலாம். தேர்வு கட்டணத்தை, அடுத்த மாதம், 11ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.இந்த தேர்வில், சார் - பதிவாளர் பதவிக்கு குறைந்தபட்சம், 20; சிறைத்துறை நன்னடத்தை அதிகாரிக்கு, 22 மற்றும் சமூக பாதுகாப்பு துறை பயிற்சி அதிகாரி பதவிக்கு, 26 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். மற்ற பதவிகளுக்கு, 18 வயது நிரம்பினால் போதும். சார் - --பதிவாளருக்கு, சட்டம் படித்திருந்தால், முன்னுரிமை தரப்படும்.

பெரும்பாலான பதவிகளுக்கு, குறைந்தபட்சம் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். முதல் நிலை தேர்வு, தலா, 150 மதிப்பெண்களுக்கு, பொது படிப்பு மற்றும் பொது தமிழ் அல்லது ஆங்கிலம் என, இரண்டு தாள்களுக்கு நடக்கும்.குறைந்தபட்சம், 90 மதிப்பெண்கள் பெற்றால், அடுத்து நடக்கும் பிரதான தேர்வை எழுதலாம் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.