இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், இடங்களை உறுதி செய்ய தவறியதால், 44 பேருக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே, இரண்டாம் சுற்று மாணவர்களாவது, ஒதுக்கீட்டு இடங்களுக்கு, தங்கள் வாய்ப்பை உறுதி செய்யுமாறு, அண்ணா பல்கலை அதிகாரிகள் தெரிவித்தனர்.


அண்ணா பல்கலை இணைப்பு கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளில், மாணவர்களை சேர்க்க, 'ஆன்லைன் கவுன்சிலிங்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், விருப்ப பதிவு முடிந்ததும், மாணவர்களின் தரவரிசைக்கு ஏற்ப, தோராயமாக இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. அவற்றுக்கு, மாணவர்கள், ஆன்லைனில் ஒப்புதல் அளித்தால் மட்டுமே, இட ஒதுக்கீடு உத்தரவு வழங்கப்படும்.

இதன்படி, முதல் சுற்றில், 190 மதிப்பெண் வரை பெற்றவர்களுக்கு, ஜூலை, 25 முதல், 27 வரை விருப்ப பதிவு நடந்தது. இதில், 7,136 பேருக்கு, இடங்கள் ஒதுக்கப்பட்டன; இடங்களை உறுதி செய்ய, இரண்டு நாட்கள் அவகாசம் தரப்பட்டது.இதில் இடம் கிடைத்தும், 368 மாணவர்கள், பல்வேறு காரணங்களால், இடஒதுக்கீட்டு உத்தரவை பெறவில்லை. அவர்களில், 44 பேர், இடஒதுக்கீட்டை, ஆன்லைனில் உறுதி செய்யாமல் விட்டதால், ஒதுக்கீடு கிடைக்கவில்லை.

இந்நிலையில், இரண்டாம் சுற்றுக்கான விருப்ப பதிவு, நேற்று முன்தினம் முடிந்தது. 175 முதல், 190 வரை, 'கட் ஆப்' மதிப்பெண் பெற்ற, 13 ஆயிரத்து, 148 பேருக்கு, இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு, இன்று மாலை, 5:00 மணிக்குள் ஒப்புதல் தர வேண்டும். இதற்காக, ஐந்து வகைகளில், மாணவர்களுக்கு வாய்ப்புகள் தரப்படுகின்றன.

எனவே, 'மாணவர்கள், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அவகாசத்தை பயன்படுத்தி, இன்று மாலைக்குள், சரியான வாய்ப்பை, விருப்பப்படி தேர்வு செய்ய வேண்டும். 'இல்லா விட்டால், அவர்களுக்கு இடமும் கிடைக்காது; மறு சுற்று கவுன்சிலிங்கிலும் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும்' என, அண்ணா பல்கலை மாணவர் சேர்க்கை செயலர், ரைமண்ட் உத்தரியராஜ் அறிவுறுத்திஉள்ளார்.

400 பேருக்கு, 'ஜாக்பாட்'

'ஆன்லைன்' கவுன்சிலிங்கில் இடங்களை உறுதி செய்ய, மாணவர்களுக்கு, ஐந்து வாய்ப்புகள் தரப்படுகின்றன. இதில், 'தற்போது ஒதுக்கிய இடத்தை பெற்று கொள்கிறேன்.'ஆனால், இந்த இடத்துக்கு முந்தைய வரிசையில் பதிவு செய்ய, இடம் ஏதாவது காலியானால் வழங்கவும்' என, இரண்டாவது வாய்ப்பு தரப்பட்டிருக்கும். 

இந்த, 'ஆப்ஷன்' தேர்வு செய்தவர்களில், 400 பேர், தங்கள் விருப்பத்துக்குரிய பாடப்பிரிவு மற்றும் கல்லுாரிகளை பெற்றுள்ளனர்.