சென்னை: கூட்டுறவு சங்கத் தேர்தல் தொடர்பாக, நேற்று முன்தினம் வெளியான அறிவிப்புகள், திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஓட்டு எண்ணவும், முடிவுகளை அறிவிக்கவும் விதிக்கப்பட்ட தடையை நீக்கிய உயர் நீதிமன்றம், வழக்கு நிலுவையில் உள்ள சங்கங்களுக்கு மட்டும், தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கூடாது என, நேற்று முன்தினம், உத்தரவிட்டது.இதைத்தொடர்ந்து, 'இரண்டாம் நிலை சங்கங்களுக்கு, தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் முடிவுகள்; மூன்று, நான்காம் நிலையில் உள்ள சங்கங்களுக்கு, நிர்வாகக்குழு உறுப்பினர் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும்' என, அறிவிக்கப்பட்டிருந்தது.மூன்று மற்றும் நான்காம் நிலையில் உள்ள, கூட்டுறவு சங்கங்களுக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல், ஆக., 6ல் நடைபெறும் என, தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர், ராஜேந்திரன் அறிவித்தார்.இந்நிலையில், இந்த அறிவிப்புகள் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.'நீதிமன்ற உத்தரவு முழுமையாக வராததால், நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்ட அறிவிப்பு, நிறுத்தி வைக்கப்படுகிறது. தேர்தல் தொடர்பான மறு அட்டவணை, பின் அறிவிக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.