டிஜிட்டல், மக்கள் தொகை பதிவேடு

'ஆதார்' விபரங்களுடன் கூடிய, மக்கள் தொகை பதிவேடுகளை, 'டிஜிட்டல்' மயமாக்கும் வகையில், புதிய, 'சாப்ட்வேர்' அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

நாட்டில், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. பிறப்பு, இறப்பு, நோய், பொருளாதாரம், மக்கள் தொகை விபரம், சமுதாய வாழ்க்கை உள்ளிட்ட விவரங்களும், மக்கள் தொகை கணக்கெடுப்பில் கிடைக்கின்றன. இதன் அடிப்படையில், மத்திய, மாநில அரசுகள், திட்டங்களை தயாரிக்கின்றன. கடந்த, 2011 கணக்கெடுப்பின் அடிப்படையில், தமிழக மக்கள் தொகை, 7.21 கோடியாக இருந்தது. ஆதார் விபரம் பதிவு செய்யப்பட்டதால், 2016ல், மக்கள்தொகை கணக்கெடுப்பு திருத்தப்பணி நடந்தது.

மக்கள்தொகை பட்டியலில் உள்ளவர்களின் ஆதார் உள்ளிட்ட விபரங்கள், மீண்டும் பதிவு செய்யப்பட்டன. பணியாளர்கள், வீடு வீடாக சென்று, மக்களின் விபரங்களை கேட்டு, திருத்தம் மேற்கொண்டனர். சட்டசபை தேர்தல் காரணமாக, அப்பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டன. நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட, மக்கள் தொகை விபரங்களை, திருத்தம் செய்து, டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மக்கள் தொகை பதிவேடுகள் தயாரிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, மாவட்ட வாரியாக, வருவாய்த் துறை அலுவலர்களுக்கான பயிற்சி துவங்கியுள்ளது. 
வருவாய்த் துறை அதிகாரிகள் கூறியதாவது: மக்கள் தொகை பதிவேடு விபரங்களை, 'ஆன்லைன்' மூலமாக பதிவு செய்ய, புதிய, 'சாப்ட்வேர்' வழங்கப்பட்டுள்ளது. வரும், 20ம் தேதி, மக்கள்தொகை பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்கும் பணி துவங்கி, 90 நாட்களில் நிறைவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியும் நவீனமாகும்.