சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, நேற்று வகுப்புகள் துவங்கின. மாணவர்களை, மூத்த மாணவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

தமிழகத்தில் உள்ள, அரசு மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்த, முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நேற்று துவங்கின. கல்லுாரிக்கு வந்த புதிய மாணவர்களுக்கு, ரோஜா மலர் கொடுத்தும், மரக்கன்றுகள் நட்டும், மூத்த மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.'ராகிங் செய்ய மாட்டோம்' என, மூத்த மாணவர்கள், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வாக்குறுதி அளித்தனர். மேலும், 'விடுதிகளில் அளிக்கப்படும் உணவுகள் தரமானதாக இருக்கும்' என, பெற்றோரிடம் விடுதி காப்பாளர்கள் தெரிவித்தனர்.சென்னை, ஓமந்துாரார் அரசு மருத்துவக் கல்லுாரியில், சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர், செயலர், ராதாகிருஷ்ணன் புதிய மாணவர்களை வரவேற்று, வாழ்த்து தெரிவித்தனர்.
சென்னை மருத்துவக் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில், டீன், ஜெயந்தி பேசியதாவது:பள்ளிகளை போல், மருத்துவக் கல்லுாரி வகுப்பறை இருக்காது. மாணவர்கள் தாங்களாகவே படிக்க, கற்றுக்கொள்ள வேண்டும். மாணவர்கள் விடுதியில் தங்கி படிக்க உள்ளதால், பெற்றோர் அவர்களை கண்காணிக்க வேண்டும். மாணவர்கள் விடுதியில் இருக்கும் நேரங்களில் தொடர்பு கொண்டு, பெற்றோர் ஆறுதலாக பேச வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரி டீன் பொன்னம்பல நமச்சிவாயம் பேசுகையில், ''இந்த பருவத்தில், மாணவர்களுக்கு கவனச் சிதறல் ஏற்படும். மாணவர்கள் கவனத்துடன் படிக்க வேண்டும். ''பிள்ளைகளை அவ்வப்போது பெற்றோர் சந்தித்து, அவர்களிடம் ஏற்படும் மாற்றத்தை கண்காணிக்க வேண்டும்,'' என்றார்.
ஓமந்துாரார் அரசு மருத்துவ கல்லுாரி டீன், நாராயணபாபு பேசுகையில், ''நோயாளிகள் நம்மிடம் மருத்துவ சிகிச்சை போலவே, ஆறுதலையும் எதிர்பார்க்கின்றனர். எனவே, சிகிச்சை அளிப்பது மட்டுமின்றி, அவர்களின் குறைகளையும் கேட்டறிந்து, அவர்களிடம் அன்பாக பழக வேண்டும்,'' என்றார்.
ராகிங் தொல்லையா? புகார் தெரிவிக்கலாம் : ராகிங் குறித்து, அந்தந்த கல்லுாரிகளில் உள்ள, ராகிங் தடுப்புக்குழு மற்றும், டீன்களிடம் புகார் அளிக்கலாம். எம்.சி.ஐ., எனப்படும் இந்திய மருத்துவ கவுன்சிலில், ராகிங் தடுப்புக்கான ஒழுங்குமுறை கமிட்டிக்கு, 18001 11154 என்ற இலவச எண்ணிலும், 011 - 2536 7033, 2536 7035, 2536 7036 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.மேலும், mci@bol.net.in, contact@mciindia.org என்ற இ - மெயில் முகவரிகள் மற்றும், www.mciindia.org என்ற இணையதளத்திலும் புகார் தெரிவிக்கலாம். இதுதவிர சிறப்பு அவசர உதவிக்கான, 011 - 2536 1262 என்ற எண்ணிலும், 2536 7324 பேக்ஸ் எண்ணிலும், antiragging-mci@nic.in என்ற, இ - மெயிலிலும், மருத்துவ மாணவர்கள் புகார் தெரிவிக்கலாம்.
மொபைல் போனுக்கு தடை : மாணவர்கள், ஜீன்ஸ், டி - சர்ட் அணியக்கூடாது. பேன்ட், முழுக்கை சட்டை, ஷூ அணியலாம். மாணவியர் சேலை, சுரிதார் ஆகிய உடைகளை அணியலாம்; மேற்கத்திய உடைகளை தவிர்க்க வேண்டும். மாணவியர் தலை முடியை விரித்து போடக்கூடாது. மாணவர்கள் விடுதியில், மொபைல் போன் பயன்படுத்தி கொள்ளலாம்; வகுப்பறைக்குள் பயன்படுத்தக் கூடாது. விதிமுறைகளை பின்பற்றாத மாணவர்கள், வகுப்பறைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
எட்வின் ஜோ, மருத்துவ கல்வி இயக்குனர்