பள்ளிக் கல்வித்துறை பாடத்திட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து த.உதயச்சந்திரனை தொல்லியல் துறைக்கு மாற்றியுள்ளது
அதிர்ச்சியளிக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கைவருமாறு:பள்ளிக்கல்வித்துறை செயலாளராக பணியாற்றிய த.உதயச்சந்திரன், அத்துறையின் பாடத்திட்ட செயலாளராக மட்டும் பணியாற்றுமாறு மாற்றப்பட்டார். இந்நிலையில், அந்தப் பொறுப்பிலிருந்தும் தற்போது மாற்றப்பட்டுள்ளார். நீட் உள்ளிட்ட தேசிய அளவிலான தேர்வுகளுக்கு தமிழக மாணவர் களை தயார் செய்யும் அளவுக்கு பாடத் திட்டக்குழு பணியாற்றி வந்தது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்ற இந்தப்பணியின் காரணமாக 6,9, 11ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடநூல்கள் தயாரித்து வெளியிடப்பட்டுள்ளன. முக்கியமான 10 மற்றும் 12 ஆம் வகுப்புகள் உள்பட மற்றவகுப்புகளுக்கான பாட நூல்கள் இனிமேல்தான் தயாரிக்கப்படவேண்டும். நீண்ட காலமாக தமிழக பள்ளி பாடநூல்கள் தற்காலப்படுத்தப்படாத நிலையில் இதுவொரு நல்ல முயற்சியாக நடந்து வந்தது. இந்நிலையில் த.உதயச்சந்திரன் மாற்றப்பட்டிருப்பது இம்முயற்சியை சீர்குலைக்கும் நோக்கம் கொண்டதாகும்.பாடநூல் தயாரிப்பு பணி முடியும் வரைத.உதயச்சந்திரனை அந்தப் பொறுப்பிலிருந்து மாற்றக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அவர் பணி மாற்றம் செய்யப் பட்டிருப்பது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். எனவே அவரது பணி மாற்றத்தை ரத்து செய்து மீண்டும் பாடத்திட்ட செயலாளராக தொடர அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

பாடப் புத்தகங்களை செதுக்கினோம்: உதயச்சந்திரன்

இட ஒதுக்கீடு குறித்து தற்போதைய தலைமுறைக்கு போதிய புரிதல் இல்லை என்பதால், அது தொடர்பான சரியான பார்வையோடு, நடப்பாண்டு பள்ளிப் புத்தகத்தில் பாடம் இடம்பெற்றுள்ளதாக, ஐ.ஏ.எஸ். அதிகாரிஉதயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.சென்னை லயோலா கல்லூரியில் பல்வேறு குழந்தைகள் அமைப்புகளின் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறையின் பாடத்திட்டப்பிரிவு முன்னாள் செயலாளரும் தொல்லியல்துறை ஆணையாளருமான ஐ.ஏ.எஸ். அதிகாரி உதயச்சந்திரன் பேசியதாவது: மாணவர்களுக்கு சமூக பிரச்சனைகளை மட்டும் சொல்லாமல், அதற்கான தீர்வை காண வேண்டும் என்ற நோக்கத்துடன் பாடப்புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஓராண்டாக பாடப்புத்தகங்களை உருவாக்கினோம் என்பதைவிட அதை செதுக்கினோம் என்றே சொல்லவேண்டும். வெறுமனே வரலாறுகளை மட்டும் சொல்லாமல், நல்ல புரிதல்களையும் பாடப்புத்தகத்தில் கூறப் பட்டுள்ளது. இட ஒதுக்கீடு குறித்து தற்போதைய தலைமுறைக்கு போதிய புரிதல் இல்லை . அது குறித்து சரியான பார்வையோடு பாடம் இடம்பெற்றுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.