11 மாணவ, மாணவியருக்கு மாற்றுச்சான்று கொடுத்து வெளியேற்றிய, பள்ளியில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.


 வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த, பொம்மிக்குப்பத்தில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில், 640, மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 22
ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

 கடந்த, 6ல், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும், 11 மாணவ, மாணவியருக்கு தலைமை ஆசிரியை சாந்தி, மாற்றுச்சான்றிதழ் கொடுத்து, பள்ளியை விட்டு வெளியேற்றினார். கடந்த, 10ல் துவங்கிய காலாண்டு தேர்வினை, அவர்கள் எழுத முடியவில்லை.

11 பேரின் பெற்றோரும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸிடம் புகாரளித்தனர். திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் சாம்பசிவம், பள்ளியில் விசாரணை நடத்தினார்.

 அதன்பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது

மாணவ, மாணவியரின் ஒழுங்கீனத்தால் பள்ளியை விட்டு தலைமை ஆசிரியை சாந்தி வெளியேற்றியுள்ளார். பலமுறை அவர்களது பெற்றோருக்கு, தகவல் தெரிவித்தும், அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

தற்போது, 11 பேருக்கும் அறிவுரை வழங்கப்பட்டு, வேறு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்