Image result for ganpati


எங்கும், எதிலும் கணபதி!

எந்த தெய்வத்திற்கும் இல்லாத சிறப்பு விநாயகருக்கு உண்டு. வீட்டுக்கு வீடு... தெருவுக்கு தெரு... ஊருக்கு ஊர்... என சிறியது முதல் பெரிய கோவில் வரை வீற்றிருப்பார். ஆளே இல்லாத கிராமத்தில் கூட அரசமரத்தடியில் கோவில் இருக்கும். 

மழை, வெயிலை பொருட்படுத்தாமல் வெட்ட வெளியில் ஹாயாக காட்சி தருவார். எங்கு சென்றாலும் விநாயகர் தரிசனம் நமக்கு கிடைக்காமல் போகாது. அருகம்புல் அல்லது பயன்படுத்தாத எருக்கம்பூக்களால் அர்ச்சித்தால் போதும். மனம் குளிர்ந்து நமக்கு அருள்வார்.குணாநிதியே! குருவே சரணம்! குறைகள் களைய இதுவே தருணம்!


* கையில் மகிழ்ச்சி பொங்க மோதகம் ஏந்தியிருக்கும் மகாகணபதியே! வழிபடுவோருக்கு பிறவாவரம் தரும் குணாநிதியே! பிரகாசமான சந்திரனைத் தலையில் சூடியவனே! உலகத்தைக் காப்பதை ஒரு விளையாட்டாகச் செய்பவனே! ஒப்பில்லாதவனே! உயர்ந்தவனே! தயாள குணம் கொண்டவனே! கஜமுகாசுரனைக் கொன்றவனே! அதர்மத்தை அழிப்பவனே! தர்மத்தைக் காப்பவனே! விநாயகனே! உன்னைத் தஞ்சம் அடைந்து விட்டோம். 

* இளஞ்சூரியன் போல உள்ளத்தில் ஒளிகொண்டவனே! பாவங்களைக் களைந்து புண்ணியம் அருள்பவனே! தேவர்களுக்கெல்லாம் தேவனே! கருணை வள்ளலே! யானை முகத்தவனே! அளப்பரிய சக்தி மிக்கவனே! செல்வத்தை வாரி வழங்குபவனே! கேட்ட வரம் தருபவனே! எல்லையில்லாத பரம்பொருளே! பிள்ளைக்கடவுளே! உன் திருவடிகளை சரணடைகிறோம்.

* உயிர்களுக்கு நலம் தருபவனே! மங்கள நாயகனே! நெஞ்சார வணங்குவோருக்கு மகிழ்ச்சி அளிப்பவனே! குற்றம் பொறுப்பவனே! குறைகளை மன்னிப்பவனே! ஓம் என்ற மந்திர வடிவானவனே! நிலையானவனே! ஒற்றைக் கொம்பனே! நல்ல புத்தியைத் தருபவனே! உலகத்தாரால் போற்றப்படுபவனே! உன் பொற்பாதங்களை அடைக்கலம் அடைகிறோம். 

* திரிபுரம் எரித்த சிவனின் மூத்த பிள்ளையே! துன்பத்தைப் போக்கி இன்பம் சேர்ப்பவனே! துாய உள்ளத்தை இருப்பிடமாக கொண்டவனே! அபயம் அளிப்பவனே! உண்மை மிக்கவனே! வெற்றிக்கு துணை நிற்பவனே! மதநீர் பொழியும் கஜமுகனே! முதலும் முடிவுமில்லாதவனே! காக்கும் பரம்பொருளே! உம் திருவடிகளைப் போற்றுகிறோம் மங்களம் தந்தருள்வாயாக.

* ஒளிமிக்க வெள்ளைத் தந்தம் கொண்டவனே! வியாசரின் மகாபாரதத்தை நுாலாக எழுதியவனே! அவ்வையாரை கைலாயத்தில் சேர்த்தவனே! காலனுக்கே காலனான சிவனிடம் ஞானக்கனி பெற்றவனே! மயில் வாகனனின் சகோதரனே! ஆதியும் அந்தமும் இல்லாதவனே! யோகியர் நெஞ்சில் வாழ்பவனே! யானைமுகப்பெருமானே! தொப்பையப்பனே! கணேசா! உம் அருளால், உலக உயிர்கள் எல்லாம் நலம் பெறட்டும். வேதத்தில் விநாயகர் :

வேதகாலம் முதலே விநாயகர் வழிபாடு உள்ளது. பழமையான ரிக் வேதத்தின் மூன்றாம் மண்டலத்தில், 'கணபதீம்' என்ற குறிப்பு உள்ளது. இப்பெயருடன், 'ஜ்யேஷ்ட ராஜன்' என்ற பெயரும் இவருக்கு உள்ளது. இதற்கு, 'முதலில் பிறந்தவன்' என்பது பொருள். 

பார்க்கவ புராணத்தின் லீலாகாண்டத்தில் விநாயகர் திருவிளையாடல்கள் உள்ளன. கடவுளை மறுக்கும் புத்த, சமண மதத்திலும் இவரது வழிபாடு மட்டும் உண்டு. தைத்ரீய ஆரண்யகம் 'தந்தி'(தந்தம் உடையவர்) என விநாயகரைக் குறிப்பிடுகிறது. 'தந்தோ தந்தி ப்ரசோதயாத்' என காயத்ரி மந்திரம் விநாயகரைப் போற்றுகிறது. சாப்பிட அடம் பிடிக்கின்றனரா?

சாக்லெட், இனிப்பு பண்டங்களை அடிக்கடி தின்னும் குழந்தைகள் சோறு சாப்பிட அடம் பிடிப்பர். அக்குழந்தைகளை விநாயகர் கோயிலுக்கு அழைத்துச் சென்று தொப்பையுடன் காட்சி தரும் விநாயகரைக் காட்டி, “ அம்மா சொல்லைத் தட்டாமல் கேட்கும் குழந்தை இது. 

அவங்க அம்மா கொடுக்கிற மோதகம், தயிர்ச்சாதம், அவல், பொரி என, சத்தான உணவுகளாகச் சாப்பிட்டு குண்டாக இருப்பதை பார்...'' என்று சொல்லி வழிபாடு செய்யுங்கள். இதனால், நம் வீட்டு குழந்தைகளின் மனதில் பக்தி, பண்பு, அன்பு ஆகிய நற்குணங்கள் வளரும். அதன் பின், அவர்கள் விருப்பமுடன் சோறு சாப்பிடுவர். பிள்ளையார் காட்டிய 'ப்ளாஷ் பேக்'

கடந்த 1963ல் ராமேஸ்வரம் சங்கர மடத்தில் ஆதிசங்கரர் மற்றும் அவரது சீடர்களின் சிலைகளை பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு நடந்தது. இதற்காக ஜெய்ப்பூரில் இருந்து சலவைக்கல் சிலைகள் லாரியில் கொண்டு வரப்பட்டன. வழியில் திண்டிவனம் - செங்கல்பட்டுக்கு இடையிலுள்ள அச்சரப்பாக்கம் அருகில் லாரி, 'பிரேக் டவுன்' ஆனது. இதற்கான காரணத்தை அறிந்த பக்தர்களுக்கு, புராணக் காட்சி, 'ப்ளாஷ் பேக்' போல தோன்றியது. 

முப்புரம் என்னும் பறக்கும் கோட்டைகளை அழிக்க தேரில் புறப்பட்ட சிவன், முதல் கடவுளான விநாயகருக்கு பூஜை செய்ய மறந்தார். எந்த செயலை தொடங்கினாலும் தன்னை வழிபட வேண்டும் என்பதை உணர்த்த விரும்பிய விநாயகர் தேரின் அச்சை முறித்தார். அந்த இடமே, 'அச்சிறுப்பாக்கம்' என்றாகி அச்சரப்பாக்கமாக மாறியது. இத்தலத்தில் லாரி பிரேக்டவுன் ஆனதற்கும், ஜெய்ப்பூரில் விநாயகர் பூஜை செய்யாததே காரணம் என, பக்தர்கள் உணர்ந்தனர். அச்சிறுப்பாக்கம் விநாயகருக்கு, 108 தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர். அதன் பின்னர் லாரி தடையின்றி ராமேஸ்வரத்தை அடைந்தது.உச்சிமலை 'லே' பிள்ளையார் :

இமயமலை அடிவாரத்தில் உள்ள நகரம், 'லே'. இங்கிருந்த ஒரு குடும்பத்தினருக்கு யானை துரத்துவது போல அடிக்கடி கனவு வந்தது. பரிகாரமாக இங்குள்ள, 'ஸபித்துக் காளிமாதா' கோவிலில் வழிபட்ட போது. விநாயகர் கோவில் கட்ட அம்மன் உத்தரவு கொடுத்தாள். காஞ்சிப் பெரியவரின் ஆசி பெற்று கோவில் திருப்பணியைத் தொடங்கிய பின் யானை துரத்தும் கனவு நின்றது. சென்னையில் இருந்து கட்டுமானப்பொருட்கள், விநாயகர் சிலை அனுப்பப்பட்டது. கடல்மட்டத்தில் இருந்து 11,500 அடி உயரத்தில் இங்கு கோவில் உள்ளது. உலகத்திலேயே உயர்ந்த இடத்தில் இருக்கும் விநாயகர் கோவில் இதுவே. ஜூன் முதல் செப்டம்பர் வரை இக்கோவிலை தரிசிக்கலாம். மற்ற நாட்களில் பனி சூழ்ந்திருக்கும்.உடனடி பலனுக்கு, '16':

விநாயகர் சதுர்த்தியன்று 'அஷ்டோத்ர நாமம்' -- 108 பெயர்கள் சொல்லி வழிபடுவர். இது முடியாவிட்டால், 16 நாமாக்கள் கொண்ட இந்த எளிய ஸ்லோகத்தைச் சொல்ல, உடனடியாக நன்மை உண்டாகும் என்கிறார், காஞ்சிப்பெரியவர். இதோ அந்த ஸ்லோகமும் அதற்கான பொருளும்.

'' ஸுமுகச்ச ஏகதந்தச்ச கபிலோ கஜகர்ணக:!
லம்போ தரச்ச விகடோ விக்நராஜோ விநாயக:!!
துாமகேதுர் கணாத்யக்ஷோ பாலசந்த்ரோ கஜாநந:!
வக்ரதுண்ட: சூர்ப்பகர்ணோ ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ!! ''

பொருள்: 
ஸுமுகன் - அழகிய முகம் உடையவர்
ஏகதந்தன் - ஒற்றைத் தந்தம் உடையவர்
கபிலர், கஜகர்ணர் - யானையின் பெரிய காதுகளைக் கொண்டவர் 
லம்போதரர் - பெருவயிறு உடையவர்
விகடர் - யானை முகத்தால் வேடிக்கை காட்டுபவர்
விக்ன ராஜர் - தடைகளை நீக்குபவர் 
விநாயகர் - தெய்வங்களில் முதல்வர்
துாமகேது - அழகானவர்
கணாத்யேக்ஷர் - தேவகணங்களுக்கு அதிபதி
பாலசந்திரர் - பிறைநிலா அணிந்தவர்
கஜானனர் - யானை முகம் கொண்டவர்
வக்ரதுண்டர் - வளைந்த துதிக்கை உடையவர்
சூர்ப்பகர்ணர் - அகன்ற காதுகளை உடையவர்
ஹேரம்பர் - ஐந்து முகங்கள் கொண்டவர்
ஸ்கந்தபூர்வஜர் - கந்தனுக்கு முன் பிறந்தவர்அம்மாடியோவ்... ஆனைமுகன் :

புகழ்மிக்க கோவில்களில் உள்ள விநாயகரின் உயரம் இடம் பெற்றுள்ளது. 
தோசாப்பூர் சின்மயா விநாயகர் - 100 அடி
மத்தியபிரதேஷ் இந்துார் விநாயகர் - 25 அடி 
கோவை புளியங்குள விநாயகர் - 19 அடி 
ஹம்பி பெரிய விநாயகர் - 18 அடி
கர்நாடகா பசவன்குடி விநாயகர் - 13.5 அடி
தஞ்சாவூர் வல்லத்துப் பிள்ளையார் - 11.5 அடி
----மூத்தவனே... முதல்வனே!

முழுமுதற் கடவுள் என்ற பெயருடன், யோகம் மற்றும் ஞானத்தின் கடவுளாகிய விநாயகரை வரவேற்று, அமைதி மற்றும் வளங்களை பெறுவதற்கு மிக உகந்த நாள், விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படும், இன்றைய திருநாள். வணங்குவதற்கு எளியவராகவும், வாழ்வில் எல்லா வளங்களையும் தருபவராகவும் இருப்பவர் விநாயகப் பெருமாள். அவரை எண்ணி வணங்கும் எல்லா நேரங்களும் விசேஷமானவை தான். எனினும், அவரின் சதுர்த்தியான இன்று வழிபடுவது, மிகவும் சிறப்பு வாய்ந்தது.

புதிய செயல்களை துவங்கும் முன், வழிபடப்படும் கடவுள் பிள்ளையார். உலகெங்கிலும் உள்ள மக்களால் தடைகளை நீக்கும் கடவுளாக, விநாயகர் வழிபடப்படுகிறார். விநாயக சதுர்த்தி என்பது, விநாயகரின் முக்கியமான விழாவாகும். இது, ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று, பிள்ளையாரின் பிறந்த நாளாய் கொண்டாடப்படுகிறது.

மராட்டிய மன்னன் சத்திரபதி சிவாஜி ஆட்சிக் காலத்திலேயே, சதுர்த்தி தினம் பெரும் விழாவாக கொண்டாடப்பட்டிருக்கிறது என்றாலும், இந்தியாவில், பாலகங்காதர திலகர், இந்நாளை, பொதுமக்கள் அனைவரும் இணைந்து நடத்தும் திருவிழாவாக மாற்றினார்.

வேதங்களின் ஆகம விதிப்படி, விநாயகரின் தெய்வீக களிமண் சிலைகளை, பாரம்பரிய நடைமுறைப்படி, நீரில் மூழ்க வைத்து கரைப்பதால், மோசமான கர்மா மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் கரையும் என, நம்பப்படுகிறது.

இதுநாள் வரை தெரிந்தோ, தெரியாமலேயோ நாம் செய்த தீயவினைகளை அகற்றி, நல்வினைகளை நமக்குள் சேர்க்கத் துாண்டும் நாளே விநாயகர் சதுர்த்தி. பிள்ளையாருக்கு பிறப்பு என்று ஒன்று இல்லை; அதனால் தான் விநாயகர் ஜெயந்தி என்று கொண்டாடாமல், விநாயகர் சதுர்த்தி என்று கொண்டாடுவதாக சொல்லப்படுவதுண்டு.

சிவப்பெருமானின் ஆசியைப் பெற்ற விநாயகர், 32 வடிவங்களில், 42 வகையான யோகங்களை நமக்கு அளிப்பதாய் கூறப்படுகிறது.

விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைத்தல் என்பதும், ஒரு வகை ஆன்மிக நம்பிக்கை தான். நீங்கள் உடைக்கும் தேங்காய் சிதறுவது போலவே, உங்களின் வளர்ச்சிக்கு தடையாய் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை, சுக்கு நுாறாய், துாள் துாளாய் சிதறடித்து முன்னேறுவீர்கள் என, நம்பப்படுகிறது.

'வி' நாயகர் என்றால், இவருக்கு மேல் நாயகர் என்று யாருமில்லை என, பொருள் கொள்ளலாம். முந்தைய வினைகளை நிறுத்திவிட்டு, இன்றைய நிலைகளில் ஞானிகளின் அருள் வாக்கினை, நாம் பெறக் கூடிய தகுதியை நமக்கு நினைவுபடுத்தும் நன்னாள் இன்று.

நெய் விளக்கு ஏற்றுதலும், மிக நம்பிக்கை அளிக்கக்கூடிய ஒரு சடங்கு. அந்த தீபத்தின் ஒளி வாயிலாக, நமக்கு ஆற்றல் தரக்கூடிய நேர்மறை அதிர்வுகளை ஈர்க்க இயலும்; பேரின்ப ஒளியை பரவச் செய்ய முடியும் என்பது நம்பிக்கையாகும். அதுவும், 108 நெய் விளக்குகள் ஏற்றும் போது, ஆரோக்கியம், செல்வம், உறவு மேம்பாடு ஆசிகள் கிட்டும்.

இன்று, ராஜ கணபதி ஹோமம் செய்வதால், துவங்கும் அனைத்து காரியங்களும் வெற்றிப் பெறும். இந்த ஹோமத்தால், வெற்றி, தலைமைத்துவ குணம், வளங்கள், சிறந்த வேலை வாய்ப்பு மற்றும் அனைத்து தடைகளிலிருந்தும் பாதுகாப்பு போன்ற ஆசிகளை, விநாயகர் வழங்குவார்.

நீர்நிலைகளில் ஈரக்களிமண் கரைந்து, நீரின் வேகத்தோடு தண்ணீர் ஓடிவிடும். காய்ந்த களிமண்ணால் ஆன பிள்ளையாரை கரைக்கும் போது, அந்த களிமண் உடனடியாக கரையாமல் அங்கே படிந்து விடும். அதனால் அந்த இடங்களில் நிலத்தடி நீர் உயரும் என்பதால், இது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

சங்கடஹர கணபதி, துர்கா கணபதி, யோக கணபதி, ஹரித்ரா கணபதி, வர கணபதி, விஜய கண்பதி, மஹா கணபதி, பால கணபதி என, நம் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான ஆரோக்கியம், செல்வம், கல்வி, துணிச்சல், மன அமைதி போன்றவற்றை தரும், இவ்வகை கணபதியின் வடிவங்களை வழிப்படுவது சிறப்பைத் தரும்.

விநாயகர் சதுர்த்தி என சொல்லப்படும், நம் முதற்கடவுளின் பிறந்த தினத்தன்று, அவரின் உருவமான யானைகளை பூஜிப்பதும், பலன் கிடைக்கச் செய்யும் ஒரு சடங்காகும். ஒற்றுமை, பார்த்தவுடன் ஒரு கம்பீரம், மரியாதை என்பதன் அடையாளமாய் விளங்கும், யானைக்கு உணவளித்து, பூஜித்தால், அதாவது, கஜ பூஜை செய்தால், விநாயகரின் அருளும், அதிகாரத்தை அடைவதற்கான ஆசிர்வாதமும் கிடைக்கும் என, நம்பப்படுகிறது.

மஞ்சள் துாளினால் குழந்தை போல் ஓர் உருவத்தை, பார்வதி தேவி செய்து, அதற்கு உயிர் கொடுத்து, 'விநாயகர்' என, பெயர் சூட்டியதாக, மறை நுால்களில், விநாயகரின் பிறப்பு வர்ணிக்கப்பட்டுள்ளது.----இன்று என்ன செய்யலாம்? எப்படி செய்யலாம்?


விடியற்காலை துயிலெழுந்து, வீட்டை நீரால் சுத்தம் செய்து, நாமும் சுத்தமாய் தலைக்கு குளித்து முடித்து, அன்றைய நாளை துவங்க வேண்டும். வாசலில் மாவிலைகளால் தோரணம் அமைத்து, மாக்கோலம் போட்டு, அதன் மீது மலர்களை வைத்து, வாசலை முதலில் அழகுபடுத்திவிட வேண்டும்.

பூஜையறையில், ஒரு மர மனையை துாய்மைப்படுத்தி வைத்து, அதன் மேல் கோலம் போட்டு, ஒரு தலை வாழை இலையை வைப்பது, பூஜையின் ஆரம்பம். அப்படி பூஜையில் வைக்கப்படும் இலையின், ஒரு நுனி, வடக்கு பார்த்தது போல இருக்க வேண்டும். அதில், பச்சரிசியைப் பரப்பி, நடுவில் களிமண்ணால் பிடிக்கப்பட்ட புதிய பிள்ளையாரை வைக்க வேண்டும். புது களிமண்ணால், புதிதாய் செய்து நடுநாயகமாய் வைக்கப்பட்டுள்ள பிள்ளையாரை, புத்தம் புது மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.

'பத்ர புஷ்பம்' எனப்படும் பல்வகைப் பூக்கள் அடங்கிய பூங்கொத்து, எருக்கம் மாலை, அருகம்புல், சாமந்தி, மல்லி என, 21 மலர்களாலும், 21 வகை பழங்களாலும், மேலும் அவருக்கு பிடித்தமான கொழுக்கட்டையும் வைத்து, பூஜையை தொடர்வது சிறப்பு தரும்.பூஜையின் போது, விநாயகர் துதி சொல்லும் பாடல்களை, குடும்பத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து, சத்தமாய் பாடுவது, பூஜையை மகிழ்ச்சிகரமாய், குதுாகலமாய் மாற்றும். விநாயகரின் தொப்பையில், ஒரு நாணயத்தை வைத்து வழிபட்டு, அதை எடுத்து வீட்டில் பூஜை செய்தால், செல்வம் பெருகும்; லட்சுமி கடாட்சம் கிட்டும்.

விநாயகருக்கு பிடித்தமானது என்று, நாம் செய்யும் கொழுக்கட்டையுடன், எள்ளுருண்டை, பாயாசம், வடை, பால், தேன், வெல்லம், முந்திரி, அவல் என்று, ஒவ்வொன்றிலும் சிறிதளவு எடுத்து கலந்து, நெய்வேத்தியம் செய்வது, பழக்கத்தில் உள்ள ஒரு சம்பிரதாயம்.இன்று விரதம் என உண்ணாநோன்பு இருப்பது, மிகவும் விஷேசம். காலையிலிருந்து எதுவும் உண்ணாமல், பூஜை வேலைகளை செய்து, விநாயகரின் துதிகளை உச்சரித்துபடி இருந்து, மாலை, களிமண்ணால் செய்து பூஜித்த விநாயகர் சிலையை, கிணற்றிலோ அல்லது ஏதாவது நீர் நிலையிலோ எடுத்து சென்று கரைப்பது வழக்கம்.

களிமண் விநாயகரை நீர் நிலைகளில் கரைப்பதையும், ஒரு சடங்காய் செய்வது, நம்மவர்களின் பழக்கம். விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்ட அன்றே கரைக்கலாம்.இல்லையென்றால், ஒற்றைப்படியாக அமையும் படியாக, மூன்று, ஐந்து, ஏழு என, நாட்களில், வீட்டு ஆண்கள் மட்டும், பிள்ளையாரை கொண்டு போய் நீர்நிலைகளில் கரைக்க வேண்டும். பிள்ளையார் சிலை நம் வீட்டில் இருக்கும் அந்த நாட்களில், இருவேளை பூஜை, நெய்வேத்தியம் செய்தல் அவசியம். அதுவரை, களிமண் சிலை சேதமடையாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.

பண்டிகை என்ற அளவில் மட்டுமல்லாது, தினமும் நாம் வணங்கப்பட வேண்டிய, தமிழ் கடவுள் விநாயகர். நம் வினைகளையெல்லாம் தீர்க்கும் விநாயகரை போற்றி வழிபட்டு, இன்றைய நாளை சிறப்பாய் மகிழ்வாய் கொண்டாடுவோம்.

அரச மரத்தடி பிள்ளையார் :

பிள்ளையார்பட்டி, உச்சிப்பிள்ளையார், மதுரை முக்குறுணி, புதுவை மணக்குள விநாயகர், தஞ்சை வெள்ளை பிள்ளையார், கோவை காரிய சித்தி விநாயகர், சேலம் ராசகணபதி, நாச்சிபாளையம் காஞ்சி விநாயகர் என, சிறப்புமிக்க பல விநாயகர்கள், தமிழகம் முழுவதும் எழுந்தருளி இருந்தாலும், நம்மூர் அரச மரத்தடி பிள்ளையார் தான், மிக சிறப்பு பெறுகிறார். 

அரச மரத்தடி நிழல் படிந்த நீரில் குளிப்பது, உடல் நலத்திற்கு நல்லது. பெண்கள் அரச மரத்தை சுற்றி வரும்போது கிடைக்கும் காற்று, அவர்களது கர்ப்பப்பை குறைபாடுகளை நீக்கக் கூடியது. ஆகையால் தான் கிராமங்களில், குளத்தங்கரையில், அரச மரத்தடியில், பிள்ளையார் வைத்திருக்கின்றனர். கிராமத்தில் இருப்பவர்கள் குளத்தில் குளித்து, அரச மரத்தை சுற்றி பிள்ளையாரை வணங்கி செல்வதால், அவர்களுக்கு கர்ப்பப்பை குறைபாடுகள் பெரும்பாலும் வருவதில்லை.தந்தம் உடைத்து உணர்த்தும் தத்துவம் :

பிள்ளையாரின் இரண்டு பக்க தந்தங்களில், இடது பக்க தந்தம் மட்டும் உடைந்திருப்பதற்கு, பல ஆன்மிக கதைகள் உலவினாலும், அறிவுப் பூர்வமான விளக்கம் உண்டு. அதை இந்த தலைமுறையினர் தெரிந்து கொள்வது அவசியம்.

பஞ்ச பூத தத்துவத்தை விளக்கும் உருவம் தான், விநாயகர் என்றும், அவரின் இரண்டு தந்தங்களுள் ஒன்று, உணர்ச்சி, மற்றொன்று, ஞானம் என்றும், ஞானம் முழுமையாய் இருக்கும் போது, உணர்வின் நிலை குறைவாகவே இருக்கும் என்பதை உணர்த்தும் விதமாக, விநாயகர் சிலையை இப்படி வடிவமைத்ததாய் சொல்வர். எந்த காரியத்திலும் உணர்வுக்கு முன், ஞானத்தின்படி தான் யோசிக்க வேண்டும் என்பதை உணர்த்தவே, இந்த உடைந்த தந்தம்.பிள்ளையார்ப்பட்டி பிள்ளையார் :

பிள்ளையார் தான் அனைத்து தெய்வங்களிலும், முதன்மையானவராக இருப்பதாய் நம்புகிறோம். அவரை கும்பிட்ட பின்தான், முக்கிய வேலைகளை துவங்க வேண்டும் என்பது, நாம் பின்பற்றி வரும் வழக்கம். அப்படி முழுமுதற் கடவுளான பிள்ளையார் சிலையாக வடிவமைக்கப்பட்டு, வழிபாட்டிற்கு அமைக்கப்பட்ட இடம், சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி என்ற கிராமத்தில் தான். தமிழகத்தில் வடிக்கப்பட்ட முதல் விநாயகர் சிலை இது என்று கூறப்படுகிறது.

முற்கால பாண்டிய மன்னர்களால், 1,600 ஆண்டுகளுக்கு முன், சிறிய மலையின் அடிவாரத்தில் குடையப்பட்ட கோவிலில், 2 மீ., உயரத்தில் கற்பக விநாயகராய் காட்சி தருகிறார், நம் பிள்ளையார். எருக்காட்டூர், திருவீங்கைக்குடி, மருதங்குடி, திருவீங்கைச்வரம், மருதங்கூர், தென்மருதுார், கணேசபுரம், கணேச மாநகரம், பிள்ளை நகர் என்பதெல்லாம், தற்போது பிள்ளையார்பட்டி என அழைக்கும் ஊரின், பழம் பெரும் பெயர்கள். கற்பக விருட்சம் போல், கேட்டதையெல்லாம் கொடுக்கும் கற்பக விநாயகர், இரண்டு கைகளோடு காட்சியளிப்பதும் இங்கு மட்டுமே.மலைக்கோட்டை பிள்ளையார் -:

வணங்குபவர்களை எல்லாம் உச்சத்தில் வைக்கும் கடவுளான, விநாயகர் வீற்றிருக்கும் உச்சிப்பிள்ளையார் கோவில், திருச்சி மாவட்டத்தில் உள்ளது. கணக்கிட்டு சொல்ல இயலாத அளவு, பழமை வாய்ந்த பாறையின் உச்சியில் இந்த கோவில் அமைந்துள்ளது. நடுவில் மலையும், அதைச்சுற்றி கோட்டையும் அமைந்துள்ள மலைக்கோட்டை எனவும் அழைக்கப்படும் இடத்தில், இந்த பிள்ளையார், 273 அடி உச்சத்தில், 437 படிகளை கடந்து காட்சியளிக்கிறார்.அருகம்புல் அவசியம் :

சிவனின் கட்டளையை ஏற்று விநாயகர், அனலாசுரன் என்ற அசுரனை அழிக்க புறப்பட்டார். தன் பூத கணங்களுடன், அந்த அரக்கனுடன் போரிட, அந்த அரக்கன், பிள்ளையாரின் படைகளை எரித்து சாம்பலாக்கி விட்டான். கோபம் அடைந்த விநாயகர், அவனை முழுங்கி விட, அந்த அரக்கன், பிள்ளையாரின் வயிற்றில் அமர்ந்து, அனலை உமிழ ஆரம்பித்து விட்டான். குடம், குடமாய் கங்கை நீரை தலையில் ஊற்றினாலும், அந்த அனல் அணையாமல், பிள்ளையாரை படுத்த, முனிவர் ஒருவர், அருகம்புல்லை பறித்து பிள்ளையாரின் உச்சித்தலையில் வைக்க, எரிச்சல் அடங்கி, அந்த அரக்கனும் ஜீரணமாகி விட்டான். அதுவே, பிள்ளையாரை குளிர வைக்க அருகம்புல் மாலையை போட்டு, பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். அதே சமயம், அறிவியல் படியும் இது, நமக்கு பல உண்மைகளை வெளிப்படுத்துகிறது.


----மிகச்சிறந்த பத்து முத்துகள் :


காரியம் வெற்றி பெற விநாயகரை வழிபடுவதுடன், பிள்ளையார் சுழி என்ற, 'உ' எனும், உகரம் எழுதப்படுவதும், தொன்று தொட்டு வழக்கத்தில் உள்ளது. இந்தியாவின் மூலை முடுக்குகளிலெல்லாம் இருக்கும் பிள்ளையார் கோவில்களில், சிறந்த, 10 கோவில்களைப் பற்றி, பிள்ளையார் சதுர்த்தியான இன்று தெரிந்து கொள்வதில், மேலும் சிறப்பு பெறுகிறோம்.

கற்பக விநாயகர் கோவில்:- தமிழகம், சிவகங்கை மாவட்டத்திலுள்ள, திருப்பத்துாரில் அமைந்துள்ளது. 1091 -- 1838ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என, ஆகம விதிகள் தெரிவிக்கின்றன. விநாயகர் சதுர்த்தி விழா, திருவிழாவாய், 10 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

உச்சிப்பிள்ளையார் கோவில்: திருச்சி மாவட்டம், மலைக்கோட்டையில் அமைந்துள்ள, மிகவும் பிரபலமான கோவில் இது. பல்லவர்களால் கட்டப்பட்டு, 7ம் நுாற்றாண்டுகளில், மதுரை நாயக்கர்களால் கட்டி முடிக்கப்பட்டதாய் வரலாறு கூறுகிறது.

மணக்குள விநாயகர் கோவில்: புதுச்சேரியில், 1666ல் கட்டப்பட்டது. சுற்றிலும் மணல் பரப்பும், ஒரு குளமும் இருந்ததால், மணக்குள விநாயகர் கோவில் என்று அழைக்கப் படுகிறது.

காணிப்பாக்கம் கோவில்: ஆந்திர மாநிலத்தின், சித்துாரில் உள்ள பிரசித்திப் பெற்ற விநாயகர் கோவில் இது. 11ம் நுாற்றாண்டில், சோழ மன்னன் முதலாம் குலோத்துங்கனால் கட்டப்பட்டது.

சாசிவேகாலு கணேசா: கர்நாடக மாநிலம், ஹம்பி நகரத்தில் உள்ளது. இது, கடுகுகளால் பூசப்பட்டுள்ளது போல் உள்ளதால், இந்த பெயர். கடுகு விநாயகர் - சாசிவேகாலு என பெயரிடப்பட்டுள்ளது. இங்கு விநாயகர், தன் வயிற்றைச் சுற்றியுள்ள ஒரு பாம்புடன் காட்சியளிப்பார். 8 அடி உயரம் உள்ள இந்த கடுகு விநாயகர், ஒரே பாறாங்கல்லால் உருவாக்கப்பட்டதாய் கூறப்படுகிறது.

தொட்ட கணபதி கோவில்: கர்நாடக மாநிலம், பெங்களூரு, பசவனக்குடி காளை கோவிலுக்கு அருகில் உள்ளது, இந்த தொட்ட கணபதி கோவில். இங்குள்ள கணபதி சிலை, ஒற்றை பாறையால் குடையப்பட்டது. கணபதியின் உயரம், 18 அடியாகவும், அகலம், 16 அடியாகவும், மிக பிரமாண்டமாய் எழுந்தருளியிருக்கும் இந்த கணபதி, மிகப்பெரிய கணபதி கோவில், அதாவது, கன்னடத்தில், தொட்ட கணபதி என்றே அழைக்கப்படுகிறது.

தக்டுசேட் கணபதி:- மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் இக்கோவில் உள்ளது. இந்தியாவின் பணக்கார கோவிலில் ஒன்றாக, இந்த தக்டுசேட் கணபதி கோவில் கருதப்படுகிறது. 

சித்தி விநாயகர் மந்தி: மும்பையில், 1801ல் கட்டப்பட்டது. முன்பு செங்கல்லால் கட்டப்பட்டிருந்தாலும், இன்று செல்வ செழிப்புடன் காணப்படுகிற இந்த சித்தி விநாயகர் கோவில், மும்பையில் மிகவும் பிரசித்தி பெற்றதாய் உள்ளது.

சுயம்பு கணபதி கோவில்: மஹாராஷ்டிராவில் உள்ளது. இங்குள்ள கணபதி சிலை, மணல் பாறையால் தானே உருவானதாக சொல்லப்படுகிறது. சிங்கத்தின் மீது, தியானத்தில் உட்கார்ந்திருக்கும் இந்த கணபதியின் தாமிர சிலை, கர்ப்ப கிரகத்தில் காணப்படுகிறது.

கொட்டாரக்கரா ஸ்ரீ மஹா கணபதி கோவில்: கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில், கொட்டாரக்கராவில் உள்ளது. முதன்மை தெய்வம், சிவன் பெயரால், கிழக்கேகர சிவன் கோவில் என அழைக்கப்பட்டு வந்த கோவில், பிள்ளையாரின் மகிமையால், கணபதி கோவில் என்றே அழைக்கப்படுகிறது. பார்வதி, முருகன், ஐயப்பன் சிலைகளும் வைத்து, தனி சன்னதியாகவும் வழிபாடு நடந்து வருகிரது.---திருக்கச்சூர் ஞான விநாயகர்!


சென்னை - செங்கல்பட்டு சாலையில், சிங்கபெருமாள் கோவில் அருகே, திருக்கச்சூர் என்ற சிறப்பான பாடல் பெற்ற திருத்தலம் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன், கச்சபேசுவரர், விருந்திட்ட ஈசுவரர் என, அழைக்கப்படுகிறார்; இறைவி, அஞ்சனாட்சி அம்மன் எனப் போற்றப்படுகிறார்.

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடையும் போது, அமுதம் திரண்டு வருவதற்காக, திருமால், கச்சபம் - ஆமை வடிவில் இருந்து, சிவபெருமானை வழிபட்டதாக, இத்தல புராண வரலாறு குறிப்பிடுகிறது. இதைக் குறிக்கும் வகையில், நுழைவு வாயில் மண்டப துாணில் சிற்பம் காணப்படுகிறது. ஆலமரம் தலமரமாக விளங்கும் இத்தலம், 'ஆலக்கோவில்' என அழைக்கப்படுகிறது. சுந்தரர் பெருமான், தம் திருப்பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும், 'கச்சூர் ஆலக்கோவில் அம்மானே' என, இத்தலத்தை போற்றுவதைக் காணலாம். இக்கோவில் கல்வெட்டுகளிலும் இத்தலம், 'திரு ஆலக்கோவில் உடைய நாயனார்' என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கோவிலிலும், தியாகராஜப் பெருமான் - சோமாஸ்கந்தர் வழிபாடு சிறப்பாக நடைபெறுவதால், திருக்கச்சூர் திருக்கோவில், உபயவிடங்கத் தலமாக சிறப்பித்து அழைக்கப்படுகிறது. தானத்தில் சிறந்தது அன்னதானம். இறைவனது அடியார்களுக்கு, அன்னம் அளிப்பது மிகவும் சிறந்தது. சுந்தரர் பெருமான், திருக்கச்சூர் திருத்தலத்திற்கு வருகிறார். இறைவனை வணங்கிய பின், அவனது கருணையை வேண்டி, பசியுடன் அங்கே அமர்ந்திருக்கிறார். இறைவன், தன் அடியாரான சுந்தரருக்காக, வீடு தோறும் சென்று, உணவு பெற்று, சுந்தரரின் பசியைப் போக்கினார். இறைவனது அருட் செயலை, சுந்தரர் பெருமான், 'முதுவாய் ஓரி...' எனத் துவங்கும் தம் திருப்பதிகப் பாடலில் போற்றுவதைக் காணலாம்.

இறைவனது இச்செயல், பெரியபுராணத்தில், 'ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணத்திலும்' விரிவாக கூறிப்படுகிறது. இதனால், இத்தலத்து இறைவனை, 'இரந்திட்ட ஈசன்' எனவும், 'விருந்திட்ட ஈசன்' எனவும் அழைக்கின்றனர். இக்கோவிலுக்கு அருகே உள்ள சிறிய குன்றில், மருந்தீசரும், இருள் நீக்கித் தாயாரும் எழுந்தருளியுள்ளனர். இங்கு மருத்துவ குணம் உடைய மூலிகைகள் இருப்பதால், 'மலை மேல் மருந்து' எனப் போற்றப்படுகிறார்.

-கி.ஸ்ரீதரன்,தொல்லியல் துறை கண்காணிப்பாளர் (பணி நிறைவு)தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை---

* கச்சூர் திருக்கோவிலின் திருச்சுற்றில், தென்மேற்கு மூலையில், விநாயகர் பெருமானுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. சிறிய கோவில் போல், கலையழகு சிற்பங்களுடன் தனிச்சிறப்புடன் விளங்குகிறது. 

* விநாயகப் பெருமான், 'ஞான விநாயகர்' என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். விமானத்தில் பூத கணங்கள் வாழைப்பழம் - பலாப்பழத்தை தாங்கியுள்ளன. 

* துாண்களில் கஜசம்ஹார மூர்த்தி, விநாயகர், ராசி சக்கரம் போன்ற பல சிற்பங்கள், காட்சி அளிக்கின்றன.

* முன் மண்டப விதானத்தின் பக்கங்களில், சுந்தரர் வரலாறு தொடர்ச்சியாக கதை போன்று, சிற்ப வடிவில் காட்சி அளிக்கிறது. 

அவிநாசி திருத்தல வரலாறு, சுந்தரர் பல்லக்கில் வருவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
சுந்தரர் வரலாற்றுடன், இத்தலம் தொடர்பு உள்ளதால், இச்சிற்பங்கள் இங்கே இடம் பெற்றிருக்க வேண்டும். திருக்கச்சூர் ஞான விநாயகர் சன்னதி தனிச்சிறப்புடன் விளங்குகிறது.

இறைவனது பாதங்கள் படிந்த, திருக்கச்சூர் திருத்தலத்தில் எழுந்தருளி அருள்புரியும் ஞான விநாயகப் பெருமானை வழிபட்டு, அறிவுச் செல்வத்தை அடைவோம்.