சென்னை:அரசு பள்ளிகளுக்கு வழங்கப்படும், 'நீட்' புத்தகத்தை, தனியார் பள்ளி மாணவர்களுக்கும் விற்பனை செய்ய, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

பிளஸ் 2 முடிக்கும், அறிவியல் பிரிவு மாணவர்கள், பொது தேர்வுக்கு பின், மருத்துவ படிப்பில் சேர, நீட் நுழைவு தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். இதில், தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகராக, அரசு பள்ளி மாணவர்களும், நீட் தேர்வில், அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற, பள்ளி கல்வி சார்பில், இலவச நீட் பயிற்சி தரப்படுகிறது. தமிழகம் முழுவதும், 412 மையங்களில், இந்த பயிற்சி நடத்தப்படுகிறது.
அரசின் பயிற்சியை பெறும் மாணவர்களுக்கு, 'பியர்சன்' என்ற, பிரபல நிறுவனத்தின், நீட் புத்தகம் இலவசமாக வழங்கப்பட உள்ளது. ராஜிவ் விஜய் என்ற, ஆசிரியர் தயாரித்துள்ள இந்த புத்தகத்தை, தமிழக பாடநுால் மற்றும் கல்வி சேவை பணிகள் கழகம் சார்பில், அச்சடித்துள்ளனர். முதற்கட்டமாக, ஆங்கில வழி மாணவர்களுக்கு, இந்த புத்தகம் வழங்கப்பட உள்ளது.
புத்தகத்தின் அம்சங்களை, தமிழ் வழியில் மொழிபெயர்க்கும் பணிகளை, பள்ளி கல்வித்துறை துவக்கியுள்ளது. தமிழ் மொழி பெயர்ப்பு முடிந்ததும், பாடநுால் கழகம் வழியாக அச்சிட்டு, நீட் பயிற்சி மைய மாணவர்களுக்கு இலவசமாக வழங்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
அதேபோல, இந்த புத்தகத்தை, தனியார் பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்யவும், பாட நுால் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.