சென்னை: அரசு துறைகளில், தேவையற்ற பணியிடங்களை கண்டறிய, அமைத்த குழுவின் பதவிக்காலம், மேலும், ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை ஆய்வு செய்து, அதை அமல்படுத்த, 2017ல், தமிழக அரசால் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கை படி, அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அமலானது. அதேநேரத்தில், 'அரசு துறைகளில், தேவையற்ற பதவிகளை கண்டறிந்து, ஆட்குறைப்பு செய்து, செலவை கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு, தனிக்குழு நியமிக்க வேண்டும்' என, குழுவின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.அதன்படி, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆதிசேஷய்யா தலைமையில், பிப்ரவரியில் குழு அமைக்கப்பட்டது. குழுவின் செயலராக, நிதி செலவினத்துறை செயலர், சித்திக் செயல்படுகிறார். இக்குழு, அரசு துறைகளில், தேவையற்ற பதவிகளை கண்டறிந்து, ஆறு மாதங்களுக்குள், அறிக்கை அளிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டிருந்தது.பதவி காலம் முடிந்த நிலையில், துறை தலைவர்களுடன், ஆலோசிக்க வேண்டி இருப்பதால், பதவி காலத்தை நீட்டிக்கும்படி, அரசுக்கு குழு கோரிக்கை விடுக்கப்பட்டது.அதை ஏற்று, குழுவின் பதவி காலத்தை, மேலும், ஆறு மாதங்களுக்கு, 2019 பிப்., 18 வரை நீட்டிப்பு செய்து, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலர், சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.