விருது பெற்ற ஆசிரியர்களுடன்  பிரதமர் மோடி கலந்துரையாடல்


புதுடில்லி: தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி, நேற்று கலந்துரையாடினார்.இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், தேசிய அளவில், நல்லாசிரியர் விருதுபெற்ற ஆசிரியர்களுடன், டில்லியில் நேற்று, பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.இதுதொடர்பாக, பிரதமர் மோடி கூறியுள்ளதாவது:மாணவர்களின் உள்ளார்ந்த வலிமையை வெளிப்படுத்தும் வகையில், ஆசிரியர்களின் பணி அமைய வேண்டும். நாட்டில் கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில், சிறப்பான பணிகளை வழங்கும் ஆசிரியர்களுக்கு பாராட்டுகள்.மாணவர்களுக்கு சிறப்பான கல்வியை அர்ப்பணிப்பு உணர்வுடன் அளித்து வரும் ஆசிரியர்களின் பணி, நிகரற்றது. ஒரு ஆசிரியர், தன் ஆயுள் முழுவதும் ஆசிரியராகவே வாழ்கிறார்.பள்ளி வளர்ச்சியில் ஓர் அங்கமாக ஆசிரியர்கள் திகழ வேண்டும். ஏழைகள், நலிவடைந்த பிரிவு களைச் சேர்ந்த மாணவர்களின் வளர்ச்சியில், ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும்.ஆசிரியர் - மாணவர் இடையிலான இடைவெளியை போக்கும் வகையில், ஆசிரியர்களின் செயல்பாடு இருக்க வேண்டும். இதனால், மாணவர்கள், வாழ் நாள் முழுவதும், தங்களுக்கு கல்வி போதித்த ஆசிரியர்களை மறக்க மாட்டார்கள். ஆசிரியர்கள், தங்கள் பள்ளிகளை, டிஜிட்டல் முறையில் உருமாற்ற உதவ வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்