மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறையால் கடந்த 1993ம் ஆண்டில் இருந்து தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.
அகில இந்தியளவில் இந்த மாநாடு டிசம்பர் 27 முதல் 31 வரை நடைபெறும். ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு பொதுவான தலைப்பின் கீழ் 10 வயது முதல் 17 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் மூன்று மாத காலம் உள்ளூர் பிரச்னை மீது ஆய்வை நடத்தி ஆய்வறிக்கை சமர்ப்பிப்பார்கள். அதன்படி இந்த ஆண்டு தூய்மையான, பசுமையான மற்றும் வளமான தேசத்திற்கான அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் போன்ற தலைப்புகள் வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 112 ஆய்வுக்கட்டுரைகள் பதிவு செய்யப்பட்டு, கடந்த மூன்று மாதங்களாக மாணவ-மாணவிகள் ஆய்வு நடத்தி வந்தனர். மாநில மாநாடு வரும் நவ.9 முதல் 11ம் தேதி வரை நாமக்கல்லில் நடைபெறவுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இருந்து பதிவு செய்யப்பட்ட ஆய்வுகளில் இருந்து மாநில மாநாட்டிற்கு செல்வதற்காக ஆய்வுக்கட்டுரைகளின் தேர்வு திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.துவக்கவிழாவிற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் செல்லதுரை தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தினேஷ் வரவேற்றார். குமரன் கல்லூரி முதல்வர் ரேச்சல் நான்சி பிலிப் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 112 ஆய்வுக்கட்டுரைகளை மாணவ-மாணவிகள் சமர்ப்பித்து பேசினார்கள். இதில் சிறந்த 15 பள்ளி மாணவர்களின் ஆய்வுக் கட்டுரை மாநில மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டது. தொடர்ந்து மாநில அளவில் தேர்வு பெற்ற கட்டுரைகளை சமர்ப்பித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது