200 கோடி செலவில் 111 பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை, ஆய்வகம், கழிப்பறை வசதி,  குடிநீர் வசதி செய்து தரப்படவுள்ளது.
இதற்காக, விரைவில் டெண்டர் விட பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது. பள்ளிகளில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, மாணவர்களின் கல்வி கற்பிக்கும் தரத்தை உயர்த்தும் வகையில், தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பள்ளிகளில் புதிதாக ஆய்வகம், கூடுதல் வகுப்பறைகள், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தர தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் கூடுதல் வசதிகள் ஏற்படுத்த வேண்டிய பள்ளிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டது. அதன்பேரில், மாவட்ட வாரியாக அதிகாரிகள் அளித்தனர். அந்த அறிக்கையின் பேரில் தமிழகம் முழுவதும் 111 மேல்நிலை பள்ளிகளில் நபார்டு வங்கியின் நிதியுதவியின் பேரில் 200 கோடி செலவில் கூடுதல் வகுப்பறை, கழிப்பறை, ஆய்வகம், தளவாட பொருட்கள், சுற்றுச்சுவர் கட்ட முடிவு செய்யப்பட்டது. 885 பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், 111 பள்ளிகளில் ஆய்வகம், தளவாட பொருட்கள், 104 இடங்களில் குடிநீர் வசதிகள், 255 இடங்களில் கழிப்பறை, 39478 மீட்டர் சுற்றுச்சுவர் அமைக்கப்படுகிறது.

இதற்காக தற்போது தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுப்பணித்துறை சார்பில் விரைவில் டெண்டர் விடப்படுகிறது.
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை, ஆய்வகம், கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் 1 பள்ளியிலும், கடலூர் மாவட்டத்தில் 2 பள்ளியிலும், திண்டுக்கல் மாவட்டத்தில் 1ம், தர்மபுரி மாவட்டத்தில் 10ம், ஈரோடு மாவட்டத்தில் 6ம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1ம், கன்னியாகுமரி மாவட்டத்தில் 2ம், கரூர் மாவட்டத்தில் 2ம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5ம், மதுரை மாவட்டத்தில் 5ம், நாமக்கல்லில் 1ம், நாகையில் 2ம், நீலகிரி, பெரம்பலூரில் தலா 1ம், புதுக்ேகாட்டையில் 21ம், ராமநாதபுரத்தில் 1ம், சேலத்தில் 14ம், சிவகங்கை 1ம், நெல்லையில் 3ம், திருப்பூரில் 2ம், திருவண்ணாமலை 3ம், திருச்சி 2ம், திருவள்ளூர் 2ம், தேனி 2ம், திருவாரூர் 1ம், தூத்துக்குடி 2ம், வேலூரில் 7ம், விழுப்புரத்தில் 10ம், விருதுநகர் 1 பள்ளி என மொத்தம் 111 பள்ளிகளில் அமைக்கப்படவிருக்கிறது. இதற்காக, 200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கூடுதல் வகுப்பறை கேட்ட 14.13 லட்சம், ஆய்வகள் 39.27 லட்சம், தளவாட பொருட்கள் 24.24 லட்சம், குடிநீர் வசதி 2.52 லட்சம், கழிப்பறை 5.59 லட்சம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு 10 நாட்களுக்குள் டெண்டர் விட உத்தரவிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டவுடன் அந்த பள்ளிகளில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது’ என்றார்