சென்னை: புரட்டாசி மாதம் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்தது. இந்த புரட்டாசி மாதத்தில் தான் அம்மனுக்கு உகந்த நவராத்திரி விழாவும், முன்னோர்களை வழிபடுவதற்கு உகந்த மஹாளய அமாவாசை ஆகிய புண்ணிய தினங்கள் வருகின்றன.

சனிக்கிழமையில் திரயோதசி வந்தால் அது மகா பிரதோஷம் ஆகும். எவரொருவர் சனிபிரதோஷத்தையும் சனி விரதத்தையும் கடைபிடிக்கிறாரோ அவருக்கு பெருமாளின் அருளும் சிவனின் அருளும் கிடைப்பதோடு சனி பகவானின் தாக்கங்கள் குறையும். அவர்கள் வாழ்வில் முன்னேற்றங்களும் நல்லவைகளும் தொடர்ந்து நடக்கும் என்பது நம்பிக்கை.

சிவ பெருமானுக்கு உகந்த சனி மஹாபிரதோஷம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த புரட்டாசி சனிக்கிழமை நாளில் பெருமாளுக்கும் சிவபெருமானுக்கும் விரதமிருந்து வழிபட்டால் கல்வி, வேலை. கடன் தொல்லை, திடீர் மரணம், உடல் உபாதைகளிலிருந்து நல்ல பலன் கிடைக்கும்.

பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், தோஷங்கள் நீங்குகிறது. எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்து, வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.

சனிக்கிழமைகளில் பெருமாளுக்குரிய வழிபாடும், சிவனுக்குரிய சனிப் பிரதோஷமும் அனுஷ்டிக்கப்படுவதிலிருந்தே நவக்கிரகங்களில் சனிபகவானுக்குரிய முக்கியத்துவத்தை பற்றி அறிந்து கொள்ள முடியும் திருப்பதி திருமலையில் நின்றவாறு காட்சியளிக்கும் ஏழுமலையான் சனீஸ்வரனின் அம்சம் நிறைந்தவர். இந்த தினம் பெருமாளுக்குரியது என்றாலும் சனி பிரதோஷமும் சேர்ந்து வருவது ஆன்மீக ரீதியாக வலுப்பெறுகிறது.

மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை சிவபெருமான் தன்னிடம் தங்கவைத்து உலகைக் காத்த நேரமே பிரதோஷ நேரம். நம்மை பற்றவிருந்த பாவங்களெல்லாம் ஈசனிடம் உறையும் நேரம். உயிர்பிழைத்த தேவ, அசுரர்கள் இசை வாத்தியமுழங்க, வேத மந்திரங்கள் ஒலிக்க பரம்பொருள்க்கு நன்றி தெரிவித்த நேரம். இசையாற் பரவசமடைந்த ஈசன் நடேசனாக நர்த்தனமாடிய நேரம் இவ்வாறு கயிலையிற் சகல தேவ, அசுரர்கள் யாவரும் துன்பம் தீர்ந்ததை எண்ணியும் ஆனந்த தாண்டவத்தை கண்டும் மெய்மறந்தும் சிவபெருமானை வழிபாடு செய்த சிறப்பிற்குரியதாகும்.

நந்தி தேவருக்கு நடக்கும் தீபாராதனைக்கு பின் மூலவரான சிவனுக்கு நடக்கும் தீபாராதனையை நந்தி தேவனின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க தோஷங்கள் நீங்கி நன்மையுண்டாகும். பிரதோஷ நேரத்தில் நந்தி பகவானுக்கு அருகம்புல், வில்வம் ஆகியவற்றால் செய்த மாலையை சாற்றி நெய்தீபமேற்றி பச்சரிசியில் சர்க்கரை கலந்து நிவேதனமாக வைத்து வழிபடுவது சிறந்தது.

புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருப்பதன் மூலம் சனி கிரகத்தின் ஆதிக்கத்தில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள முடியும். மகரம், கும்பம் ராசிகளுக்கு அதிபதியாகவம், லக்னங்களில் ரிஷபம், கன்னி, துலாம், கும்பத்திற்கு யோகாதிபதி ஆகவும் விளங்குகிறார். இவர்கள் தங்கள் பலன்களை அதிகரித்துக் கொள்ளவும், மற்ற ராசியினரும் லக்னத்தினரும் அவரால் ஏற்படும் கெடுபலன்களை குறைத்துக் கொள்ளவும். தவறாமல் சனிக்கிழமை விரதம் இருக்க வேண்டும்.

நாளைய தினம் புரட்டாசி சனி, கூடவே சனிப் பிரதோஷமாக அமைந்திருக்கிறது. ஆகவே இந்த நாளில் காலையில் பெருமாள் கோவிலுக்கும், மாலையில் சிவ பூஜையில் கலந்து கொண்டு தரிசிப்பதன் சகல பாபங்கள் நீங்கி சகல ஐஸ்வர்யங்களை பெறலாம்.