புதுடில்லி: காற்று மாசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள டில்லி மாநகரில், 'ஜன்னல்களை மூடி வையுங்கள்; 'மாஸ்க்' எனப்படும், மூக்கை மூடும் துணிகவசம் அணியுங்கள்' என, மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம், மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
டில்லியில், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த்கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார்.டில்லியை ஒட்டிய, பஞ்சாப், ஹரியானாமாநிலங்களில், விவசாய கழிவுகளை எரிப்பதாலும், ஏராளமான வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் புகையாலும், அபாயகர அளவில் காற்று மாசு உள்ளது.இதனால், சுவாசம் தொடர்பான பல்வேறு நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், டில்லி மக்களுக்கு, மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் தலைமையிலான சிறப்பு குழு கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:டில்லி நகரில் வாழும் மக்கள், காற்று மாசால் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க, வீடுகளை விட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். தனியார் வாகன பயன்பாட்டை கூடிய வரையில் குறைத்துக் கொள்ள வேண்டும்.வீடுகளில் ஜன்னல்களை மூடிய நிலையில் வைத்திருக்க வேண்டும். 'மாஸ்க்' எனப்படும், மூக்கை மூடும் துணி கவசத்தை மக்கள் அணிய வேண்டும்.டில்லியில், நவ., 1 - 10 வரையிலான நாட்களில், புழுதி ஏற்படாமல் தடுக்கும் வகையில், கட்டட கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும். கட்டடங்களுக்கு பள்ளம் தோண்டுதல் மற்றும் மாசு ஏற்படுத்தக்கூடிய ஆலைகள் செயல்பாட்டை நிறுத்த வேண்டும்.நிலக்கரி உள்ளிட்ட எரிபொருள் தொடர்பான தொழிற்சாலைகள் செயல்பாட்டை, நவ., 4 - 10 தேதிகளில் நிறுத்த வேண்டும். அதிகளவில் மாசு வெளியிடும் வாகனங்கள் இயக்குவதை போக்குவரத்து துறை தடுக்க வேண்டும்.டீசல் ஜெனரேட்டர் பயன்பாட்டை குறைக்கும் வகையில், டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில், தடையற்ற மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.