'பாடத்திட்டம், தேர்வு தொடர்பாக, டில்லி அலுவலகத்துக்கு வராமல், மண்டல அலுவலகங்களை தொடர்பு கொள்ள வேண்டும்' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,க்கு, நாடு முழுவதும், 20 ஆயிரம் பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த பள்ளிகளின் நிர்வாக பணிகளை கவனிக்க, 10 மண்டல அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மண்டல அலுவலக அதிகாரிகள், பள்ளிகள் மற்றும் மாணவர்களின் குறைகளை கேட்பதில்லை; மனுக்களை பெற்று, நடவடிக்கை எடுப்பதில்லை.சென்னை உள்ளிட்ட மண்டல அலுவலகங்களில், அலுவலகத்திற்குள் அனுமதி கிடைப்பதற்கே, பெரும் முயற்சிகள் எடுக்க வேண்டும். அதனால், பெரும்பாலான பெற்றோரும், பள்ளி நிர்வாகத்தினரும், டில்லி அலுவலகத்தை தொடர்பு கொள்கின்றனர். எனவே, டில்லி தலைமை அலுவலகத்தில், நிர்வாக பணிகள் பாதிப்பதாக, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., விடுத்த அறிவிப்பு வருமாறு:சி.பி.எஸ்.இ.,க்கு, நாடு முழுவதும், 10 மண்டல அலுவலகங்கள் உள்ளன. அவற்றின் முகவரிகள், சி.பி.எஸ்.இ.,யின், http://cbse.nic.in என்ற இணையதளத்தில் உள்ளன. எனவே, தேர்வு முறை, பாட திட்டம் தொடர்பான நிர்வாக பிரச்னைகளை, மண்டல அலுவலகங்களில், தீர்த்து கொள்ள வேண்டும்; டில்லிக்கு தொடர்பு கொள்ள வேண்டாம்.பள்ளிகளின் நிர்வாகத்தினரும், மண்டல அலுவலகத்துக்கு மட்டுமே, தொடர்புகளை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். பெற்றோரும், மாணவர்களும், பள்ளிகளில் மட்டுமே, குறைகளை தெரிவிக்க வேண்டும். அங்கு, குறைகளை நிவர்த்தி செய்யாவிட்டால், மண்டல அலுவலகங்களை அணுக வேண்டும்.தேர்வு நடத்துவது, பாடங்களுக்கான அனுமதி பெறுவது, மாணவர்களுக்கான சலுகை பெறுவது, கட்டணம், தேர்வு மையம் அமைத்தல், முறைகேடு புகார்கள், ஆவணங்களில் குளறுபடி, பெயர் விபரங்களை சரிசெய்வது, மதிப்பெண் சரிபார்த்தல், பழைய தேர்வு முடிவுகளை பெறுவது என, அனைத்து பணிகளுக்கும், மண்டல அலுவலங்களையே அணுக வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.