சேலம்:'தமிழக முதல்வர், சர்வாதிகாரி போல செயல்படுகிறார்' என, 'ஜாக்டோ - ஜியோ' மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூறினர்.

'புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்' உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.
நவ., 27 முதல், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கான ஆயத்த மாநாடு, நேற்று சேலத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மீனாட்சி சுந்தரம், சுப்பிரமணியன் ஆகியோர், அளித்த பேட்டி:எங்களது நியாயமான கோரிக்கைகளை, இரண்டு ஆண்டுகளாக, அரசிடம் வைத்து வருகிறோம். அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப்படுத்தி வருகிறது. 
மேலும், முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அவதுாறாகவும் பேசி வருகின்றனர்.இந்த அலட்சியப் போக்கை கண்டித்து, நவ., 27 முதல், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும். இதில், அனைத்து சங்கங்களும் பங்கேற்பதால், அனைத்து பணிகளும் முடங்கும்.தமிழகத்தில் இதுவரை இருந்த முதல்வர்கள், அரசு ஊழியர்களை அழைத்து பேசி தீர்வு கண்டனர். 
தற்போது உள்ள முதல்வர், அழைத்து பேசாமல், சர்வாதிகாரி போல செயல்படுகிறார். உரிய நடவடிக்கை எடுக்கா விட்டால், லோக்சபா தேர்தலில், அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.