சென்னை:அரசு மற்றும் அரசு உதவி பெறும், 8,000 பள்ளிகளில் பணியாற்றும், 1.63 லட்சம் ஆசிரியர்களை கண்காணிக்க, 'பயோ மெட்ரிக்' வருகை பதிவேடு முறைக்கு, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

'அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், சரியாக பணிக்கு வருவதை கண்காணிக்கும் வகையில், பயோ மெட்ரிக் வருகை பதிவு திட்டம் அமல்படுத்தப்படும்' என, பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.திட்டத்தை நிறைவேற்ற, தமிழக மின் மேலாண்மை மற்றும் தேசிய தகவல் தொடர்பு மையத்தின் வழியாக, பயோ மெட்ரிக் திட்டத்திற்கான செயல்முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. 
இந்த திட்டத்தை நிறைவேற்ற, 15.30 கோடி ரூபாயில் மதிப்பீடு தயார் செய்து, அதற்கான அறிக்கையை, தமிழக அரசுக்கு, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் அனுப்பினார்.அறிக்கையை ஆய்வு செய்து, திட்டத்தை அமல்படுத்த, பள்ளி கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ், அரசாணை பிறப்பித்துள்ளார். நடப்பு நிதி ஆண்டில், 9 கோடி ரூபாயும், மீதி தொகை அடுத்த நிதி ஆண்டிலும் வழங்கப்படும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும், 3,688 உயர்நிலை மற்றும் 4,040 மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும், 1.63 லட்சம் ஆசிரியர்களின் ஆதார் எண்ணை பயன்படுத்தி, மின்னணு பயோமெட்ரிக் வருகை பதிவு செய்யப்படும்.இந்த வருகை பதிவு, தமிழக அரசின் கல்வி மேலாண்மை திட்டமான, 'எமிஸ்' தகவல் தொகுப்பில் சேகரித்து வைக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.