மதுரை: மகாளய பட்சத்தில் பித்ரு லோகத்திலிருந்து பூமிக்கு வரும் முன்னோர்கள் ஐப்பசி அமாவாசை வரை பூலோகத்திலிருந்து நாம் தரும் தர்ப்பணம் மற்றும் பூஜைகள் ஆகியவற்றை ஏற்றுக் கொள்வதாகவும் ஐதீகம். எனவே ஐப்பசி அமாவாசை நாளில் முன்னோர்களை நினைத்து வணங்கினால் அவர்களின் ஆசி நமக்கு முழுமையாகக் கிடைக்கும்.

ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மாதம் மகாளய பட்சம், மகாளய அமாவாசை முன்னோர்கள் வழிபாட்டிற்கு ஏற்ற நாட்கள். அதேபோல தீபாவளி திருநாளான சதுர்த்தசி நாளிலும் பித்ரு வழிபாடு செய்யலாம். புதுத்துணிகளை படைத்து, இனிப்புகள், உணவுகளை படையலிட்டு முன்னோர்களை வணங்கினால் அவர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம்.

நம்முடைய இந்த உடல், உயிர் மற்றும் பொருள் அனைத்தும் நம் பித்ருக்கள் அளித்ததே. நம்முடன் வாழ்ந்த நம்முடைய முன்னோர்களான நமது பித்ருக்கள் நமக்கு அளித்த இந்த உடல், உயிர் மற்றும் பொருள் இவற்றை நாம் அனுபவித்து வருகிறோம். அவ்வாறு நாம் அனுபவிக்கும் போது நமது பித்ருக்கள் செய்த பாவம் மற்றும் புண்ணிய பலனையும் சேர்த்தே அனுபவித்து வருகிறோம். நம்முடன் வாழ்ந்து மறைந்த நமது பித்ருக்கள் எப்போதும் நமது நலனையே விரும்புபவர்கள்.

நமது பித்ருக்கள் நம்முடன் வாழும் போது அவர்களை பேணிக் காத்து பசியினை போக்க வேண்டும். அதே போல் அவர்கள் மறைந்த பின்பும் அவர்களின் பசியைப் போக்க வேண்டும். இதுவே பிதுர்கடன் எனப்படும். அமாவாசையன்று நாம் பித்ருக்களுக்கு வழிபாடு செய்து அவர்களின் பசியை போக்காமலோ இருந்தால் நமது பித்ருக்கள் வருத்தத்துடன் பிதுர்லோகம் செல்வர்.வருத்தத்துடன் செல்லும் பித்ருக்களில் சிலர் கோபம் கொள்வர். அத்தகைய பித்ருக்கள் கோபத்தினால் நமக்கு சாபமும் அளிப்பர்.

இந்த சாபம் தெய்வத்தின் அருளையே தடை செய்யும் வலிமை கொண்டது. பிதுர் தோஷம் நீங்காமல் மற்ற பரிகாரங்கள் செய்தாலும் பரிகாரங்கள் பலன் தருவதில்லை. எத்தகைய மந்திர செபங்களும் சித்தியடைவதில்லை. இதற்கு காரணம் நமது பித்ருக்களின் சாபம் தான். எனவே முதலில் பிதுர் தோஷத்தினைப் போக்கிட வேண்டும்.

இன்றைக்கும் பல வீடுகளில் கன்னி தெய்வ வழிபாடாக முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு ரிப்பன், கண்ணாடி, காதோலை கருகமணி படைத்து வழிபட்ட பின்னரே புத்தாடைகளை அணிந்து தீபாவளி கொண்டாடுகின்றனர். நரகாசூரனை கிருஷ்ணர் வதம் செய்த நாளாகவும், மகாபலி மன்னர் முடிசூட்டிக்கொண்ட நாளாகவும் தீபாவளி கொண்டாடப்பட்டாலும் நம் முன்னோர்களை நினைத்து வணங்கி அவர்களின் ஆசியை பெறுவோம்.